Published : 04 Oct 2018 10:32 AM
Last Updated : 04 Oct 2018 10:32 AM
அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்புச் சரிவு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அவசியமற்ற 19 பண்டங்களின் இறக்குமதி மீதான சுங்கத் தீர்வையை அதிகரித்துள்ளது மத்திய அரசு. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க இந்நடவடிக்கை போதாது என்றும் குறுகியகால நிவாரணத்துக்கு மட்டும் நடவடிக்கையைச் சிந்திக்காமல் நீண்டகால நோக்கில் அரசு சிந்திக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.
2017-18-ல் இறக்குமதியான மொத்த வணிகச் சரக்குகள் மதிப்பில் இப்போது வரி உயர்த்தப்பட்டுள்ள சரக்குகளின் மொத்த மதிப்பே 3%-க்கும் குறைவு. அது மட்டுமின்றி நடப்பு நிதியாண்டில் ஆறு மாதங்கள் கழிந்துவிட்டன. எஞ்சிய காலத்துக்கு இந்த வரி விதிப்பால் கணிசமான தொகை அரசுக்குக் கிடைத்துவிடப்போவதில்லை. சிலவகை நுகர்வுப் பண்டங்களின் மீதான வரியை 20% அளவுக்கு உயர்த்துவதால் இவற்றின் நுகர்வேகூடக் குறைந்துவிடலாம். ரூபாயின் மதிப்புச் சரிவால் ஏற்கெனவே இவற்றின் விலை உயர்ந்துவிட்டது. எனவே, அரசின் நோக்கப்படி இதில் வரிவருவாயும் அதிகமாகிவிடாது, இறக்குமதியாகும் பண்டங்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படுவதன் நுகர்வும் கணிசமாக உயர்ந்துவிடாது. இது உளவியல்ரீதியாக இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற திருப்தியை மட்டுமே ஆட்சியாளர்களுக்குத் தரக்கூடும்.
விமான எரிபொருள் மீதான சுங்கக்கட்டணம் 5% ஆக விதிக்கப்படுவதால் உள்நாட்டில் விமானக் கட்டணம் அதற்கேற்ப உயரும். ஏற்கெனவே கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்வு, ரூபாயின் மாற்று மதிப்புச் சரிவு காரணமாக விமான நிறுவனங்கள் கணிசமாக வருவாயை இழந்துவருகின்றன. இந்தச் சூழலில், ஏற்றுமதிக்கு உள்ள தடைகளை அரசு ஆராய்ந்து நீக்கியிருக்கலாம். ஊக்குவிப்புகளை அளித்திருக்கலாம். வரிவிதிப்புகளைக் குறைத்திருக்கலாம். இந்தியாவின் உற்பத்தித் துறைக்குத் தேவைப்படும் இறக்குமதிகளின் மதிப்பைவிட, ஏற்றுமதி அதிகமாகும் அளவுக்குக் கொள்கை முடிவுகளை எடுத்திருக்கலாம். ஏற்றுமதியாளர்கள் செலுத்திய ஜிஎஸ்டியிலிருந்து அவர்கள் திரும்பப் பெற வேண்டிய உள்ளீட்டு வரித் தொகையை உடனடியாகத் திருப்பித் தருவது ஊக்குவிப்பாக இருக்கும்.
சீனத்திலிருந்து வியட்நாம், வங்கதேசத்துக்குச் செல்லும் உற்பத்திப் பிரிவுகளை இந்தியாவை நோக்கி ஈர்த்திருக்க முடியும். கையிருப்பில் அபரிமிதமாக நிலக்கரி இருக்கும்போது அவசரத் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை நல்லதல்ல. இத்துறையை நன்கு நிர்வகித்திருந்தால் தேவையற்ற இறக்குமதியைக் குறைத்திருக்க முடியும்.
உலகச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஈரான் மீதான தடை மேலும் இறுகும் சமயத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியே கணிசமாகக் குறையக்கூடிய நிலை உருவாகிவருகிறது. எனவே, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைத் தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமாகவே குறைக்கவும் மொத்த ஜிடிபி மதிப்பில் 3% என்ற அளவுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். வலுவான, நிலையான நடவடிக்கைகளே இதற்கெல்லாம் வழிவகுக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT