Published : 05 Oct 2018 08:58 AM
Last Updated : 05 Oct 2018 08:58 AM

குத்தகை - நிதி சேவை நிறுவனம்: குறைகளைச் சரிசெய்யாமல் எப்படி மீட்க முடியும்?

அடித்தளக் கட்டமைப்பு குத்தகை - நிதி சேவை (ஐஎல்அண்ட்எஃப்எஸ்) நிறுவனத்தைக் காப்பாற்ற மத்திய அரசு காலம் தாழ்ந்துதான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகளை அரசே அறிவித்திருக்கிறது. நடைமுறை மூலதனம் இல்லாததால் முடங்கியிருக்கும் நிறுவனத்துக்குப் புத்துயிர் ஊட்டவும், அதன் நிர்வாகக் கோளாறுகளைச் சரிசெய்யவும், பொதுக் கடன் மற்றும் பங்கு வெளியீடுகள் மூலம் நிதி திரட்டவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதில் எதுவுமே தவறு இல்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்நடவடிக்கையை எடுத்திருந்தால் பொருளாதார இழப்பு குறைந்திருக்கும். இந்நிறுவனத்தைக் கண்காணித்து உரிய காலத்தில் பரிகார நடவடிக்கை எடுக்க இந்திய ரிசர்வ் வங்கியும் தவறிவிட்டது.

‘அடித்தளக் கட்டமைப்பு சேவைகள் அளிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்’ என்று இதை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்த மதிப்பு ரூ.1,15,000 கோடி. மொத்தக் கடன் அளவு ரூ.91,000 கோடி. இவ்வளவு பெரிய நிறுவனம் தோல்வியடையும்படி விட்டுவிடக் கூடாது. இந்நிறுவனத்துக்கும் வங்கிகள், பரஸ்பர நிதிகள், அடித்தளக் கட்டமைப்பு உருவாக்குபவர்கள் ஆகியோருக்கும் இடையே வலுவான பிணைப்பு இருக்கிறது. எனவே, நிறுவனம் கடனில் மூழ்கி நஷ்டம் அடைந்தால், இதனுடன் தொடர்புள்ள அனைத்துத் துறைகளுக்கும் இழப்பு நேரிட்டிருக்கும்.

நிறுவனத்தின் கோளாறுகளுக்கு இயக்குநர்களே காரணம். அவர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை அரசே நியமித்திருக்கிறது. நிர்வாகக் குழுத் தலைவராக உதய் கோடாக், உறுப்பினர்களாக முன்னாள் அரசு அதிகாரி ஜி.சி.சதுர்வேதி, செபி அமைப்பின் முன்னாள் தலைவர் ஜி.என்.பாஜ்பாய் நியமிக்கப்பட்டுள்ளனர். அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இப்படி நிதிச் சிக்கலை எதிர்கொள்வது புதிதல்ல. அப்படிப் பல நிறுவனங்கள் சிக்கிக்கொண்டதன் மொத்த விளைவுதான், அரசுடைமை வங்கிகளின் வாராக் கடன் சுமை. ஆனால், ஐஎல்அண்ட்எஃப்எஸ் விவகாரத்தில் அவ்விதம் மூழ்க விடாமல் காக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்ற செய்தியையே பங்குச்சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு அரசு இதன் மூலம் உணர்த்தியிருக்கிறது.

இந்நிறுவனத்தின் பிரச்சினை கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத திவால் நிலையல்ல. தொடர்ந்து செயல்பட ரொக்கப் பற்றாக்குறை நிலவுகிறது என்பது மட்டுமே. இதற்கு முக்கியக் காரணம், கடனை இது அதிகமாக வாங்கியதுதான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவித்த ரிசர்வ் வங்கி, எப்படி இதைக் கண்காணிக்கத் தவறியது என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிறுவனத்தை மீட்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான விடைகளைப் பெறுவதும். குறைகளை முழுவதுமாகக் கண்டறிந்தது அவற்றைச் சரிசெய்யாமல் முழுமையான மீட்பு சாத்தியமல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x