Published : 23 Oct 2018 09:02 AM
Last Updated : 23 Oct 2018 09:02 AM
பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் தசரா கொண்டாட்டத்தின்போது கூட்டத்தினர் மீது ரயில் மோதிய விபத்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நிகழ்ச்சியை வேடிக்கைபார்ப்பதற்காகத் தண்டவாளத்தில் கூடியிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். பல தரப்பிலிருந்து வெளிப்பட்ட அலட்சியத்தின் கோர விளைவான இவ்விபத்து தொடர்பாக, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வது விபத்தைக் காட்டிலும் ஆழ்ந்த வேதனையைத் தருகிறது.
தசரா நிகழ்ச்சி நடந்த தோபி காட் எனும் பகுதி பெரிய மைதானம் அல்ல. மக்கள் அதிகம் கூடி நிகழ்ச்சி நடத்தும் அளவிலான வசதிகள் அங்கு இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ‘இச்சம்பவத்தில் ரயில்வே துறையின் தவறு ஏதும் இல்லை, ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை அவசியமில்லை’ என்று ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பது மற்றொரு அதிர்ச்சி. விபத்தால் மக்கள் கோபமடைந்து கற்களை வீசியதால்தான் உடனடியாக ரயிலை நிறுத்த முடியவில்லை என்று ரயில் ஓட்டுநர் கூறியிருப்பதை அப்பகுதி மக்கள் மறுத்திருக்கிறார்கள்.
பாதுகாப்புப் பணியில் மிகக் குறைவான போலீஸாரே ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சிக்கு பஞ்சாப் அமைச்சர் சித்துவின் மனைவி தலைமை தாங்கியது அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கிறது. இதற்கிடையே, மாநில அரசு மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. எனினும், இவையெல்லாம் கண்துடைப்புதான்.
நவீனக் கண்காணிப்பு கேமராக்கள், வாக்கி-டாக்கிகள், வாகனங்கள் என்று எல்லாம் புழக்கத்துக்கு வந்த பிறகும் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டம் அதிகம் சேரும் விழாக்களின்போது என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழிகாட்டு நெறிகளை விளக்கமாக அனுப்பிவைத்திருக்கிறது. அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் இதைக் கடைப்பிடித்ததா என்று தெரியவில்லை. இந்தியாவைப் போல விபத்துகளில் இவ்வளவு பேர் சாகும் அவலம் வேறெங்கும் இவ்வளவு சாதாரணமாக நடப்பதில்லை.
இத்தகைய விழாக்களை நடத்துவதில் முற்றிலும் மாறுபட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் முன்னணி முகமை ஒன்று கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தையும், அதை நிறைவேற்றும் பொறுப்பையும் ஒருங்கே பெற வேண்டும். சிறிய நகரங்களிலும் பெருநகரங்களிலும் மக்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பெரிய மைதானங்களே இல்லை எனும் குறை களையப்பட வேண்டும்.
ரயில் பாதைகளுக்கு அருகில் மக்கள் கூடுமிடங்கள், மைதானங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு சுற்றுச்சுவர் போன்ற தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதில் மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. மிக முக்கியமாக, இதுபோன்ற விபத்துகளின்போது பொறுப்பைத் தட்டிக்கழித்து பிறர் மீது குற்றம்சாட்டுவதை அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT