Published : 24 Oct 2018 09:46 AM
Last Updated : 24 Oct 2018 09:46 AM
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் கச்சா எண்ணெயின் சர்வதேச விலையைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் எண்ணெய்த் தேவைகளில் 80% இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால், எண்ணெயின் விலை அதற்கு நிகரான ரூபாய் மதிப்பில் 70% அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கு நீண்ட காலத் தீர்வுகள்தான் கைகொடுக்கும்.
கச்சா எண்ணெய்க்கான சர்வதேச விலையை அமெரிக்க டாலர்களாகத்தான் தர வேண்டும் என்பதைத் தளர்த்தி, ஒரு பகுதியை இந்திய ரூபாயாகத் தரவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. டெல்லியில் சமீபத்தில் நடந்த எண்ணெய் வள நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, “உலகப் பொருளாதாரம் மீட்சி அடைய எண்ணெய் வள நாடுகள் விலையைச் சற்றே குறைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருக்கிறார். அக்கூட்டத்தில் பேசிய சவுதி அரேபிய எரிபொருள் துறை அமைச்சர் காலி ஏ.அல்-ஃபாலியிடமிருந்து வெளிப்படையாக எந்தப் பதிலும் வரவில்லை. மாறாக, தங்களுடைய நாடு உற்பத்தியை அதிகரித்திருக்காவிட்டால் இந்த விலை மேலும் உயர்ந்திருக்கும் என்று மட்டுமே அவர் சொன்னார். சர்வதேசச் சந்தையில் இந்தியாவுக்கு உதவ, போட்டி விற்பனையாளர்கள் யாரும் இல்லை என்பதால் அவருடைய பதிலில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.
இந்தியாவின் வெளிவர்த்தகத்தில், ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப்பதால் ஜிடிபி மதிப்பில் 2.4% அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இது இப்படியே நீடித்தால் 2018-19 நிதியாண்டின் இறுதியில் இது 3% அளவுக்கு உயரக்கூடும். இந்திய ரூபாயின் மாற்றுமதிப்பு ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 16% சரிந்திருக்கிறது. இது மீட்சியடையும் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் என்று அடையாளம் காணப்பட்ட இந்தியாவுக்கு எதிர்மறையான விளைவைத்தான் ஏற்படுத்தும்.
பெட்ரோல், டீசல் மீதான வரியைச் சிறிதளவு குறைப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து வரியைக் குறைக்க வேண்டும். அப்படிக் குறைத்தால், அரசின் செலவுக்கு இணையாக வருவாயை உயர்த்தும் இலக்கில் தோல்வி ஏற்படும். நிதிக் கணக்கில் பற்றாக்குறை அதிகரிப்பதும் நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, பெட்ரோல்-டீசல் பயன்பாட்டைக் குறைப்பது, மாற்று எரிபொருள், மேலும் சில நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வது என்று நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுத்து உடனடியாகச் செயல்படுத்தியாக வேண்டும். இறக்குமதியாகும் பெட்ரோல்-டீசலைப் பெரிதும் சார்ந்திருக்கும் பொருளாதார முறையை மாற்றும் வழிமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT