Published : 08 Oct 2018 08:50 AM
Last Updated : 08 Oct 2018 08:50 AM
வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்சக் கொள்முதல் விலையை அதிகரித்து அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சில மாதங்களுக்கு முன் கரீஃப் பருவத்தை ஒட்டி விலையை அறிவித்த அரசு, இப்போது ரபி பருவத்தை ஒட்டி மீண்டும் ஒரு விலை உயர்வை அறிவித்திருக்கிறது. தேர்தல் காலச் சிறப்பு அறிவிப்புகளின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது என்றாலும் வரவேற்புக்குரிய நடவடிக்கை இது.
ரபி பயிர்கள் சாகுபடி நவம்பரில் தொடங்கும். ஐந்து மாநிலத் தேர்தல் பிரச்சாரம் அந்நாட்களில் உச்சத்தில் இருக்கும். விவசாயிகளிடம் உள்ள அதிருப்தியைக் குறைக்க இப்போதைய விலை உயர்வு அறிவிப்பு உதவும் என்று பாஜக கணக்கிடுகிறது. குறிப்பாக, கோதுமை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கும் கொள்முதல் விலையானது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் விவசாயிகளிடம் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்கலாம். ஆனால், நம்மூரில் விவசாயிகளுக்கு என்ன நல்லது நடக்க வேண்டும் என்றாலும், அதற்கு ஏதோ சில மாநிலங்களில் தேர்தல் வர வேண்டும் என்பதே இயல்பாகிவருவது நல்லதல்ல.
விவசாயிகளின் பிரதான பிரச்சினைகளில் ஒன்று, உணவு தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்பது. விதை, உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றுடன் டீசல் விலையும் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகளுக்குச் சாகுபடிச் செலவு உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், இதற்கு ஈடாகக் கொள்முதல் விலை உயர்வதில்லை. மேலும், ஒரு சில பயிர்களுக்குத்தான் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. பெரும்பாலான பயிர்கள் சந்தை நிர்ணயிக்கும் விலைக்குத்தான் விற்கப்படுகின்றன. இது பெரிய பிரச்சினை.
விவசாயிகளின் குரல்கள் இங்கே முறையாகப் புரிந்துகொள்ளப்படுவதே இல்லை. மத்திய பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காந்தி ஜெயந்தி அன்று டெல்லிக்குப் பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் காஜியாபாதில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடியடியையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், ஏன் விவசாயிகள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துகின்றனர்? அவர்களுடைய முக்கியமான கோரிக்கைகள் என்ன? “இடுபொருட்களைக் குறைந்த விலையில் தாருங்கள், பழைய விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள், விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்…” இவை எல்லாமே கொள்முதல் விலை நிர்ணயத்தோடு தொடர்புடையவைதானே?
வேளாண் பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதிசெய்ய முழுமையான செயல்திட்டம் ஒன்றை அரசு தீட்ட வேண்டும். நியாயமான கொள்முதல் விலை, விளைச்சலான தானியங்கள் விற்கப்படும் வரையில் பாதுகாப்பதற்கான சேகர அமைப்பு, சந்தை வாய்ப்புகள் விரிவாக்கம் இவற்றை இணைத்துச் சிந்தித்தால் மட்டுமே இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் தூக்கி நிறுத்த முடியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT