Published : 20 Aug 2018 09:02 AM
Last Updated : 20 Aug 2018 09:02 AM
நாட்டின் பெரும்பாலான மக்கள், மருத்துவ சிகிச்சைகளுக்காகத் தங்கள் வாழ்நாள் சேமிப்பையே செலவழிக்க வேண்டியிருக்கும் இன்றைய சூழலில், ‘தேசிய சுகாதாரப் பாதுகாப்பு இயக்கம்’ (என்எச்பிஎம்) செப்டம்பர் 25 முதல் முறைப்படி தொடங்கிவைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குடும்பத்துக்குத் தலா அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவை அரசு ஏற்கவிருக்கிறது. உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டம் என்று அழைக்கப்படும் திட்டம் இது.
இந்தத் திட்டத்தின்கீழ் நாடெங்கும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித ரொக்கப் பரிமாற்றமும் செய்யாமல் மக்கள் சிகிச்சை பெற இயலும். சமூக, பொருளாதார, சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் பயனாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். மாநில அரசுகள் தங்களுடைய முகமை மூலம் அமல் செய்யவிருக்கின்றன. மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி பெற்ற இதர உதவியாளர்கள், கருவிகள், மருந்து-மாத்திரைகள், அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. மாநில அரசுகள் குறைகளைக் களைந்து, நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். சிகிச்சைச் செலவுகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப வலையமைப்புகள் மிகுந்த கவனத்துடன், விரிவாகச் செய்யப்பட வேண்டும்.
இந்த இயக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால், ஒவ்வொரு மாநில அரசும் அதன் பட்ஜெட் தொகையில் 8% அல்லது மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 2.5% அளவுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அதேசமயம் புதிய திட்டத்துக்குத் தேவைப்படும் மருத்துவ ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதும் பயிற்சியளிப்பதும் மனிதவள மேம்பாட்டுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும். சுகாதாரச் செலவுகள் குறைய வேண்டும் என்றால், அரசுத் துறையில் மருத்துவமனைகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் அதிகப்படுத்த வேண்டும். தனியார் அமைப்புகள் மூலம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதும் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை அளிப்பதும் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் மேற்கொள்ள முடியும்.
இந்தத் திட்டம் தொடர்பான புகார்களைப் பெறவும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் தலைமைக் கண்காணிப்பு அமைப்பு வேண்டும். குடும்ப வருவாய் என்னவென்று பாராமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் சிகிச்சை தர வேண்டும். புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவும் திட்டத்தில் இடம்பெற வேண்டும். இந்தத் திட்டத்தை முனைப்புடன் அமல்படுத்துவதன் மூலம், சிகிச்சைக்குப் பணமில்லாமல் அல்லாடும் பல குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும். நல்லது நடக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT