Published : 04 Aug 2018 09:20 AM
Last Updated : 04 Aug 2018 09:20 AM
சமூக ஊடகங்கள் நட்பின் எல்லையை விரிவுபடுத்தி யிருக்கின்றன. உடன் படித்தவர்கள், பணிபுரிந்தவர்கள், உறவினர்கள் என்று பலதரப்பினரையும் இணைக்கும் மையப்புள்ளியாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. வாழ்வின் இனிய தருணங்களை, மகிழ்ச்சியை, வருத்தத்தை, கோபங்களை, அரசியல் கருத்துக்களை, சினிமா விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்வதும் விவாதிப்பதும் வழக்கமாகியிருக்கிறது. ஆனால், பகிரப்படும் பதிவுகளில், நிலைத்தகவல்களில் புத்தகங்களுக்கான இடம் என்னவென்று யோசித்தால் ஏமாற்றம்தான்.
எழுத்தாளர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் தாங்கள் எழுதும் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார்கள். தங்களுக்குப் பிடித்தமான சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றி அடிக்கடியும் சக எழுத்தாளர்களைப் பற்றி அவ்வப்போதும் எழுதுகிறார்கள் என்பதெல்லாம் சரிதான். ஆனால், எழுத்தாளர்கள் மட்டும்தான் புத்தகங்களைப் பேச வேண்டுமா என்ன? ஒவ்வொரு வாசகருக்கும் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றி தன்னளவில் சொந்த அபிப்ராயங்கள் இருக்கும். பிடித்திருக்கும், பிடிக்காமலும் இருக்கும். அதைப் பற்றிச் சொல்வதற்குக் கூடுதல் விஷயங்களும் இருக்கும். அதையும்கூட சமூக ஊடகங்களில் பதியலாம். பார்க்கும் சினிமாவைப் பற்றி உடனடியாக சமூக ஊடகங்களில் எழுதும் ஆர்வம், படிக்கும் புத்தகங்களைப் பற்றி எழுதுவதில் ஏன் இல்லை?
வாசிப்பு அனுபவம் மிகவும் அந்தரங்கமானது, அதைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்றெல்லாம் எந்த விதியும் இல்லை. பகிர்ந்துகொண்ட அறிவு செழுமையடைகிறது என்பதே அறிவுத் தேடலின் அரிச்சுவடிப் பாடம். ஆனால், பார்க்க நேர்கிற காட்சிகளைப் புகைப்படமாகவோ காணொலியாகவோ உடனடியாகப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளும் ஆர்வம், படித்த புத்தகத்திலிருந்து பிடித்த ஒரு வரியைப் பகிர்ந்துகொள்வதில் இல்லை. நேரடி உரையாடல்களை அரசியலும் சினிமாவும் ஆக்ரமித்துள்ளதைப் போல, சமூக ஊடகங்களைப் புகைப்படங்களும் காட்சித் துணுக்குகளுமே ஆக்ரமித்துக்கொண்டுள்ளன.
வாசகர்களின் புத்தகம் குறித்த எதிர்மறையான அபிப்பிராயங்கள் எழுத்தாளர்களுக்கும், அந்தப் புத்தகத்தின் தீவிர ரசிகர்களுக்கும் எரிச்சல் மூட்டுவதாக இருக்கிறது. உடனடியாக ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு விமர்சித்தவரைக் கிண்டலடிப்பதும், தரக் குறைவான வார்த்தைகளால் திட்டுவதும் என ஒரு கசப்பான சூழலை உருவாக்கிவிடுகிறார்கள். இளையவர்கள் என்றில்லாமல் மூத்த படைப்பாளிகளின் விமர்சனங்களும்கூட பல சமயம் இப்படியான இக்கட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றன. இதுவும்கூட வாசிப்பு குறித்த உரையாடல் குறைந்து ஒரு மௌனச் சூழல் உருவானதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் ஒரு தகவல், உடனடியாகப் பலராலும் விரும்பப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. புத்தக வாசிப்பு பற்றிய தகவல்கள் விருப்பக் குறிகளைப் பெற்றுத்தராது என்ற காரணத்தாலேயே வாசிப்பு அனுபவங்கள் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. நல்ல புத்தகங்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுபோலவே, நண்பர்களிடம் புத்தகங்களைப் பற்றி கலந்துரையாடுவதும் அவசியமான ஒன்று. சமூக ஊடகங்களின் வழியாக விரிந்து பரவும் நட்பு வட்டத்தில் புத்தகங்களுக்கும் கொஞ்சம் இடமிருக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT