Published : 21 Aug 2018 09:20 AM
Last Updated : 21 Aug 2018 09:20 AM
இந்தோனேஷியாவில், வரும் ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிபரும் இந்தோனேஷிய ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஜோகோ விடோடோவுக்கும், ஜெரின்ட்ரா கட்சியைச் சேர்ந்த பிரபாவோ சுபியாந்தோவுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக இரு தலைவர்களும் தங்களுடைய உத்தியைத் தெரிவித்துப் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இன அடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரமும் இந்தத் தேர்தலில் பெருமளவில் இடம் பிடிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
சுகார்த்தோ தலைமையில் சுமார் 30 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியைச் சந்தித்த இந்தோனேஷியா, 1999-க்குப் பிறகுதான் ஜனநாயகப் பாதையில் நடைபோடுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய பொருளாதார வளம் மிக்க நாடான இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினர். அதே சமயம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களும் வாழ்கின்றனர். துணை அதிபர் பதவிக்காக அதிபர் விடோடோ அறிவித்திருக்கும் வேட்பாளரான மரூஃப் அமின் மதப் பழமைவாதி. வாக்காளர்களில் பழமையில் ஊறியவர்கள் தங்களுடைய கட்சியைவிட்டு விலகிவிடக் கூடாது என்பதற்காக மரூஃப் அமினை நிறுத்தியிருக்கிறார் விடோடோ.
இந்தோனேஷியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாவா இனத்தைச் சேர்ந்தவரான அதிபர் விடோடோ மீது இன அடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. 2014 தேர்தலின்போது, விடோடோ சீன இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர், தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இதனால் அவருக்குத் தோல்வி ஏற்படவில்லையே தவிர, வாக்கு வித்தியாசம் வெகுவாகக் குறைந்தது. அந்தத் தேர்தலிலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிரபாவோ சுபியாந்தோதான். இந்தோனேஷியாவின் சிறப்புப் படைகளுக்குத் தலைவராகப் பதவி வகித்தபோது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சுபியாந்தோ மீது புகார்கள் உண்டு. இந்தப் புகார் காரணமாகத்தான் அவரை அமெரிக்கா தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
2014-ல் நடந்த தேர்தலில் வென்று ஜகார்த்தா ஆளுநரான பாசுகி டஹாரா பூர்ணமா, விடோடோவின் அரசியல் வாரிசு என்றே கருதப்படுகிறார். கிறிஸ்தவரான பூர்ணமா, 2017 ஆளுநர் தேர்தலில் மிகக் கடுமையான போட்டியில் தோல்வியுற்றார். மதக் குற்றம் புரிந்ததாக பூர்ணமா மீது அரசியல் போட்டியாளர்கள் கடுமையாகக் குற்றஞ்சாட்டினர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜகார்த்தா ஆளுநர் பதவிக்கு 2017-ல் நடந்த தேர்தல் பிரச்சாரம், விடோடோ - பிரபாவோவுக்கு இடையில் மோதல் தீவிரமாகக் காரணமாக அமைந்தது. இதே நிலை தொடர்ந்தால் 2019 பொதுத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இரு தரப்பும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கைவிட்டால் அந்த அபாயம் நேராது என்பது மட்டும் நிச்சயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT