Published : 01 Aug 2018 08:53 AM
Last Updated : 01 Aug 2018 08:53 AM

மாநில அரசுகளுக்குக் காதுகொடுக்குமா ஜிஎஸ்டி கவுன்சில்?

தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிர் சாதனப் பெட்டி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரிவிகிதம் 28%-லிருந்து 18% ஆகிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பேட்டரிகளை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்கள் மீதான வரி 28%-லிருந்து 12% ஆகிறது. அவற்றின் மீதான நஷ்டஈட்டு கூடுதல் வரியும் கைவிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், சிமெண்ட் உட்பட 35 பொருட்கள் இன்னும் 28% வரிவிகிதத்தில் தொடர்கின்றன.

சானிடரி நாப்கின்கள் மீதான 12% வரியை ரத்துசெய்துள்ளது பாராட்டுக்குரியது. கடந்த மார்ச் 8-ல் மகளிர் தினத்தையொட்டி மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி என்.சிவா, சானிடரி நாப்கின்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. நாப்கின்களுக்கு வரியில்லை என்பதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் நாப்கின்கள், உள் நாட்டில் தயாரிப்பதைவிட மலிவாக இருக்கும். எனவே, உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் பாதிப்படைவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத வகையிலும் அதேவேளையில் சானிடரி நாப்கின் மீதான வரிவிலக்கு தொடரும் வகையிலும் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

பொதுச் சரக்கு - சேவை வரி முறை அமலுக்கு வந்து 13 மாதங்கள் ஆகின்றன. அதற்குள் ஜிஎஸ்டி கவுன்சில் 28 முறை கூடி வரிவிகிதங்களைக் குறைக்கவும் ரத்துசெய்யவும் முடிவெடுத்துள் ளது. 200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரிவிகிதங்கள் 13 மாதங்களில் மாறியுள்ளன. ஜிஎஸ்டி முன்கூட்டியே தெளிவாகத் திட்டமிடாமல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது என்பதையே இந்த வரிவிகித மாற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த வரிவிதிப்பு மாற்றங்களைத் தாண்டி அடியாதாரப் பிரச்சினை ஒன்று தொடர்ந்து விவாதமாகிவருகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் செயல்பாடு குறித்து மாநிலப் பிரதிநிதிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிவருகின்றனர். வரிக் குறைப்பு தொடர்பாக உறுப்பினர்கள் வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளும் விவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டு முடிவெடுக்கப்படுவதில்லை என்ற அவர்களது குற்றச்சாட்டு புறந்தள்ளிவிடக்கூடியதல்ல. கட்சி வேறுபாடு இல்லாமல், மத்திய அரசும் மாநில அரசுகளும் விவாதித்து, கருத்தொற்றுமை அடிப்படையில் செயல்படத்தான் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. அங்கு மத்திய அரசின் யோசனைகளும் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் யோசனைகளும் மட்டுமே ஏற்கப்படும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சில் எதற்காக?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x