Published : 11 Nov 2025 06:33 AM
Last Updated : 11 Nov 2025 06:33 AM
நாடு முழுவதும், தெருநாய்ப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பொது இடங்களில் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதுதொடர்பாகத் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் பதிவுசெய்த வழக்கில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் விலங்குகளால் ஏற்படும் மனித மரணங்களில் 90% தெருநாய்கள், வளர்ப்புநாய்கள் கடித்து ரேபிஸ் ஏற்படுவதால் நிகழ்வதாக உலகச் சுகாதார நிறுவனமும் இந்திய நோய்க் கட்டுப்பாட்டு மையமும் கூறுகின்றன. அதைச் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், இதர அரசுத் துறை கட்டிடங்களில் இருந்து தெருநாய்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள் 2023ன்படி கருத்தடை செய்யப்பட்ட, தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மீண்டும் அதே இடங்களில் விடப்பட வேண்டும். அந்த விதிக்கு மாறாக இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கும் உச்ச நீதிமன்றம், பொதுஇடங்களில் பிடிக்கப்படுகிற தெருநாய்களை மீண்டும் அதே இடங்களில்விட அனுமதிப்பது, அப்பகுதிகளை நாய்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் விளைவுகளைச் சீர்குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.
காப்பகங்களில் தெருநாய்கள் அடைக்கப்படுவது அவற்றின் இயல்புத்தன்மையைக் குலைத்து மூர்க்க குணத்தை அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர். அதை உச்ச நீதிமன்றம் மறுதலித்திருக்கிறது. தெருநாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் காப்பகங்கள் இல்லை என்பது அரசுகளுக்கு ஒரு சவால்தான்.
தெருநாய்கள் தொடர்பான வழக்கொன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் மாநில / தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் நாய், மாடு போன்ற விலங்குகளை உள்ளாட்சி அமைப்புகள், சாலைப் போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை இணைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
தெருநாய்களுக்குக் கருத்தடை மேற்கொள்வதில் உள்ள போதாமை, உணவுக்கழிவு அகற்றுதலை முறைப்படுத்தாமை, மக்களிடையே ரேபிஸ் விழிப்புணர்வு முழுமையற்று இருத்தல், அரசுத் துறைகளிடையே சுற்றுப்புற மேலாண்மை ஒருங்கிணைப்பு இன்மை போன்றவற்றால் இப்பிரச்சினை தீவிரநிலையை அடைந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், தெருநாய்கள் பிரச்சினையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது பொருளாதாரரீதியில் நலிந்த மக்கள்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில் எதிர்க்குரல் எழுப்புபவர்களுக்கு, வெளிநாடுகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளாத, வட்டார மக்களின் பண்பாட்டில் வளர்ப்பு விலங்குகள் கையாளப்படுவது குறித்த பார்வை வேண்டும். விலங்குகளின் மீதான கருணை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மனிதர்களின் வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையே உச்ச நீதிமன்ற உத்தரவு பிரதிபலிக்கிறது.
அரசமைப்புச் சட்டக் கூறு 21ன்படி மக்களின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிற வகையில் இந்த விவகாரத்தில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதே தீர்வுக்கு வழிகாட்டும். அந்த வகையில், இந்த உத்தரவு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வை வழங்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT