Published : 16 Oct 2025 06:40 AM
Last Updated : 16 Oct 2025 06:40 AM
தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், வருவாய்க் கிராமங்கள் உள்ளிட்டவற்றில் இருக்கிற சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இது சமத்துவச் சமூகத்தை அமைக்கிற முன்னெடுப்பாக அமைந்தபோதிலும், அதன் சாத்தியக்கூறுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான அம்சங்களும் இருப்பதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
நீண்ட காலமாகத் தீண்டாமையின் குறியீடாகவே தொடர்ந்த ‘காலனி’ என்கிற சொல்லுக்கு முடிவுகட்டும் வகையில், ‘காலனி என்கிற சொல்லை அரசு ஆவணங்கள், பொதுப்பழக்கத்தில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சி என்று சொல்லத்தக்க வகையில், சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆட்சேபகரமான பெயரை மாற்றுவது குறித்துக் கிராம சபை அல்லது உள்ளாட்சி மன்றங்களின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் பரிசீலனைக்குப் பிறகு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 21 நாள்களுக்குள் அப்பகுதி மக்களின் கருத்துகள் கோரப்பட்டு, பின்னர் பெயர் மாற்றம் வெளியிடப்படும். குறிப்பிட்ட தெரு, நீர்நிலை உள்ளிட்டவற்றில் இருக்கிற சாதிப் பெயரை மாற்றுவது அப்பகுதி மக்களின் பெருவாரியான முடிவைப் பொறுத்தது என்கிற நிலைக்கு இந்த உத்தரவு வழி வகுத்துவிடக்கூடாது.
இதற்கிடையே, கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பாலத்துக்கு ‘ஜி.டி. நாயுடு பாலம்’ எனப் பெயர் வைத்தது எதிர்க்குரல்களை அதிகப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆளுமையின் பெயரை முழுமையாகத் தமிழில் குறிப்பிடுவது, அடைமொழிகளைச் சொல்வதன் வழியாக, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
வடநாட்டுத் தலைவர்களின் பெயர்களில் இருக்கிற சாதிகளையும் இவ்விவகாரத்தில் விதிவிலக்காகக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட பிரிவினர் சில வண்ணங்களை, மலர்களைத் தமது அடையாளமாக முன்வைக்கிற சூழலில், நீர்நிலைகளுக்கு மலர்களின் பெயர்களைச் சூட்டுவதிலும் தீவிரக் கவனம் அவசியமாகிறது.
அரசின் பரிந்துரைப் பட்டியலில் குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயர்கள் இல்லை என்று சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அந்தந்தப் பகுதியின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட தலைவர்களது பெயர்களைப் பயன்படுத்தலாம் என்று பதிலளித்திருக்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைச் சாதிய அடிப்படையில் வேண்டுமென்றே முன்னிறுத்துகிற பட்சத்தில், புதிதாகப் பிரச்சினைகள் எழலாம். எவருக்கும் ஆட்சேபம் இல்லாதபட்சத்தில், குறிப்பிட்ட பெயர்கள் தொடரலாம் என்பதும் குழப்பங்கள் அதிகமாக வழிவகுக்கலாம்.
ஆட்சியர் தலைமையிலான குழுக்களில் எவ்விதச் சார்புக்கும் இடம் தராமலிருப்பது, குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களின் சாதிரீதியிலான அடையாளப்படுத்தலைத் தடுப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்படையாத வகையில் தொலைநோக்கோடு பெயர்களைத் தேர்ந்தெடுப்பது, இவ்விவகாரத்தில் மொழிப்புலமையைத் தாண்டிப் பல்துறை நிபுணர்களின் பங்களிப்பைப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்கள் தேவைப்படுவதால், இந்நடவடிக்கையில் நிதானம் அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்நடவடிக்கையை நிறைவேற்றுகிற உத்தேசம் சில சாதிப் பெயர்கள் அப்படியே தொடரவும் இடம் தந்துவிடலாம்.
சாதி அடையாளங்களுக்கு முற்றாக முடிவுகட்டுவது தற்போதைய நடவடிக்கையின் நோக்கம் என்றால், எங்கும் எதிலும் சாதி அடையாளத்தின் சாயல் இராது என்று உறுதிப்படுத்துகிறவாறு, தடங்கல்களுக்கு இடம் இல்லாமல் சீர்மையுடன் இதைச் செயல்படுத்துவதே நல்லது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT