Published : 28 Aug 2018 08:49 AM
Last Updated : 28 Aug 2018 08:49 AM

சட்ட மேலவை குறித்து தேசியக் கொள்கை அவசியம்

சட்ட மன்றங்களில் மேலவை வேண்டுமா வேண்டாமா எனும் விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது ஒடிஷா மாநில அரசு கொண்டுவந்திருக்கும் தீர்மானம். 2015-ல், ஒடிஷா அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 49 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவை தேவை என்று அந்த மாநில அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஏழு மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கும் சூழலில், மேலவை தொடர்பாகப் பல மாநிலங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் அரசியல் கட்சிகளிடையேயும் இதில் கருத்தொற்றுமை இல்லை என்றும் தெரிகிறது.

ஒரு மாநிலத்தில் சட்ட மேலவையை ஏற்படுத்துவது, நீண்ட தொடர் நடவடிக்கைகளைக் கொண்ட நடைமுறையாகும். முதலில் மாநில சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிறகு, அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு அது தொடர்பாகப் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். அசாம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் சட்ட மேலவையை அமைக்க வேண்டும் என்று 2013-ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மசோதாக்கள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன.

இந்த மசோதாக்களைப் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, உத்தேசப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் தந்தாலும் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. சட்ட மேலவைகளை உருவாக்குவது தொடர்பான தேசியக் கொள்கையை நாடாளுமன்றமே வகுக்க வேண்டும், அப்போதுதான் மாநிலங்களில் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் திடீரென மேலவையைக் கலைக்காமல் இருக்கும் என்று அக்குழு தெரிவித்துள்ளது. சட்ட மேலவையில் ஆசிரியர்கள், பட்டதாரிகளுக்குப் பிரதிநிதித்துவம் தரும் சட்டம் தொடர்பாக மறுபரிசீலனை தேவை என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

கல்வியாளர்கள், அறிஞர்கள், மகளிர், சிறுபான்மைச் சமூகத்தவர் இடம்பெற மேலவை நல்ல வாய்ப்பாக இருக்கும். சட்டப் பேரவைகளில் அவசரமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் நிறைவேற்றும் மசோதாக்களை நிதானமாகப் பரிசீலிக்கவும், அறிவுபூர்வமாக ஆராயவும் மூத்தவர்கள்-படித்தவர்கள் நிரம்பிய மேலவை வாய்ப்பளிக்கும். ஆனால், அரசியல் தலைவர்கள், தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குற்றப் பின்னணி உள்ள கட்சி முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், அதிகாரத் தரகர்கள், திரைப்படப் பிரமுகர்கள் இடம்பெறும் கொலு மண்டபமாக மேலவை மாற்றப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இதனால், சட்ட மேலவைக்கான செலவு வீண் விரயம் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் எழுத்தறிவு பெற்றவர் எண்ணிக்கைக் குறைவு என்பதால், பட்டதாரித் தொகுதிகளுக்கு அவசியம் இருந்தது. இப்போது கோடிக்கணக்கில் பட்டதாரிகள் பெருகிவிட்டனர். பேரவையிலும் அமைச்சரவையிலுமே அதிகப் பட்டதாரிகள் உள்ளனர். மேலும், நாடாளுமன்ற மேலவையானது மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை என்பதால், அதை சட்ட மேலவைகளுடன் ஒப்பிடுவதும் பொருத்தமல்ல. எனவே, ஒடிஷாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும் அதே சமயத்தில், நாடு முழுவதற்கும் சேர்த்தே கருத்தொற்றுமை அடிப்படையில் தேசியக் கொள்கை வகுப்பது நல்லது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x