Published : 11 Sep 2025 06:47 AM
Last Updated : 11 Sep 2025 06:47 AM

அந்தமான் பழங்குடியினருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடாது!

அந்தமான் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்னும் பெயரில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’ கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

166 ச.கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், பழங்குடி உரிமைச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிரேட் நிகோபார் தீவு வளம் மிக்க வெப்பமண்டல மழைக்காடுகள், அரியவகைப் பல்லுயிர்களின் குடிலாகும். இந்தக் காடுகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உயிர்நாடியாகத் திகழ்கின்றன. இம்மண்ணின் மைந்தர்கள் ஷோம்பென், நிகோபார் ஆதிக்குடிகள்.

‘பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006’, ‘வனப் பாதுகாப்புச் சட்டம் 1980’, ‘புதிய திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கும் அறிவிப்பு 2006’, ‘கடலோர ஒழுங்காற்று மண்டலங்களை வகைப்படுத்தி, பாதுகாத்து, மேம்படுத்தும் அறிவிப்பு 2011’ உள்ளிட்ட சட்டங்கள் நிகோபார் தீவின் சுற்றுச்சூழல், சூழலியல், பூர்வகுடிகள் என அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் மீறித் தற்போது ஷோம்பென், நிகோபார் பழங்குடியினரிடமிருந்து 130 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட காடுகளும் வாழ்விடமும் பறிக்கப்படுகின்றன.

முன்னதாக, 2022 ஆகஸ்ட் 18 தேதியிட்ட அறிக்கையில் ஷோம்பென், நிகோபார் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே இத்திட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுபோல் எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை என லிட்டில்-கிரேட் நிகோபார் பூர்வகுடிகள் மன்றம் தெரிவிக்கிறது. அத்துடன் மத்திய அரசின் இந்தச் செயல் சட்டரீதியிலானதா எனச் சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிலும், ஷோம்பென் இன மக்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிகோபார் தீவில் வசித்துவரும் பூர்வகுடிகள். இன்றளவும் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மரபின்வழி வாழ்ந்துவரும் இம்மக்கள், புற உலகுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள்; வனப் பாதுகாப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எந்தச் சட்டத்தாலும் இவர்களைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியாது. தவிர, இந்தத் திட்டத்துக்காக அங்குள்ள புலிகள் காப்பகத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள கிராம மக்களைத் துரிதமாக இடம் மாற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பதும் பேசுபொருளாகியிருக்கிறது.

மறுபுறம், ‘கிரேட் நிகோபார்’ திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஏறத்தாழ ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டு, வேரோடு அகற்றப்படும் அபாயம் உள்ளது. அதிலும் அகற்றப்படும் மரங்களின் அடிக்கட்டைகளை எரித்து எரிபொருள் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குளிர்காய வேண்டி ஒரு நூலகத்தின் புதையல் போன்ற சேகரிப்புகளை எரிப்பதற்குச் சமமாகும். கிரேட் நிகோபார் தீவின் கிழக்குக் கடற்கரை நெடுகிலும் பவளத்திட்டுகள் விரவியிருப்பதால் அங்கு துறைமுகம், கப்பல் கட்டுமானப் பணிகளைக் கொண்டுவரும் பட்சத்தில், புவியின் நுரையீரலை அழித்தொழிப்பதாக மாறிப்போகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய பிரம்மாண்டமான திட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் அந்தமான் - நிகோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக் கழகம் (ANIIDCO) எந்த வகையிலும் உள்கட்டமைப்பு, கட்டுமானப் பணிகளோடு தொடர்புடைய நிறுவனம் அல்ல. கடந்த 35 ஆண்டுகளில் இந்நிறுவனம் மதுபான விற்பனை, பால் உற்பத்தி - விநியோகம், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.

‘கிரேட் நிகோபார் திட்டம்’ மூலம் பழங்குடியினரிடமிருந்து நிலம் பறிக்கப்படுவது அவர்களுடைய உரிமைகளை நசுக்கி, இயற்கையைச் சுரண்டும் செயல் என எழுந்திருக்கும் குரல்களுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x