Published : 10 Sep 2025 07:34 AM
Last Updated : 10 Sep 2025 07:34 AM

ஏமாற்றப்பட்ட முதியோருக்கு இழப்பீடு: வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!

கோப்புப்படம்

ஏமாற்றுப் பேர்வழிகளிடம் முதியவர்கள் நகையையோ பணத்தையோ பறிகொடுப்பது தொடர்பான வழக்குகள் அதிகரித்துவருகின்றன. முதியவர்கள் பணத்துக்காகக் கொலை செய்யப்படும் அவலங்களும்கூட அரங்கேறுகின்றன. இந்நிலையில், அந்த வழக்குகளில் காவல் துறையால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிப்பதை உறுதிசெய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.

பெரும்பாலும் உடல்நலம் குன்றி, வெளியுலக நடப்புகள் குறித்த புரிதலில் பின்தங்கியுள்ள முதியவர்களை ஏமாற்றுவது சமூக விரோதிகளுக்கு எளிதாக இருக்கிறது. இவர்களை வீட்டிலோ, பொது இடங்களிலோ மிரட்டி அல்லது ஏமாற்றி உடைமைகளைப் பறிக்கும் குற்றங்கள் இந்திய அளவில் அதிகம் நிகழ்வதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கைகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் ம.பொ.சி. நகரைச் சேர்ந்த பி.கிருஷ்ணவேணி (68), 2018இல் ரத்தப்பரிசோதனைக்காகக் கணவருடன் ச ன்றுகொண்டிருந்தபோது, சிலர் மிக நுட்பமாக ஏமாற்றி இவர்களிடமிருந்து 17.5 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இந்த வழக்கில், திருவள்ளூர் நகர காவல் துறையினரால் தற்போதுவரைக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

விசாரணையை நிறைவுசெய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி கிருஷ்ணவேணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். செப்டம்பர் 2 அன்று நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி இந்த வழக்கை விசாரித்தபோது, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான அறிக்கை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், எதிர்காலத்தில் துப்புக் கிடைத்தால் விசாரணை தொடரும் என்பதை அதில் தெரிவித்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

“மிக பலவீனமான நிலையில் உள்ள முதியவர்கள், இத்தகைய மோசடிகளால் மன உளைச்சலுக்கு உள்ளாவது அதிகரித்துக்கொண்டே செல்வதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது; முதியவர்களைக் காப்பதே குற்றவியல் நீதித் துறையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிய நீதிபதி, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்டத்தின் 396ஆம் பிரிவின்படி, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட முடியாத இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிக்கப்படுவதைத் தீர்வாக முன்வைத்தார்.

இழப்பீட்டுக்காகத் தமிழ்நாட்டில் 2013இல் உருவாக்கப்பட்ட திட்டம் ரூ.1 லட்சத்தை மட்டும் வழங்குகிறது. இதன் போதாமை குறித்து வருந்திய நீதிபதி, “நகைகளை ஏழு ஆண்டுகளுக்கு முன் இழந்த மனுதாரருக்கு இழப்பீடு இன்றைய மதிப்புக்குக் கொஞ்சமாவது பொருந்த வேண்டும். எனவே, காவல் துறை அவருக்கு நகை மதிப்பில் 30% அல்லது ரூ.5 லட்சம் ஆகியவற்றில் குறைவான ஒன்றை இழப்பீடாக அளிக்க வேண்டும். ஒருவேளை, எதிர்காலத்தில் நகை கண்டுபிடிக்கப்பட்டால், இந்தத் தொகையை மனுதாரர் திருப்பிச் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இந்த உத்தரவு, கிருஷ்ணவேணி என்கிற தனிநபருக்குக் கிடைத்த ஆறுதல் மட்டுமல்ல; இவரைப் போல உடைமைகளைப் பறிகொடுத்து நிவாரணம் கிடைக்காமல் காவல் நிலையத்துக்கு அலைந்துகொண்டிருக்கும் இன்னும் பல முதியோருக்கு அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை. இன்னொரு புறம், முதியோரை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும் மோசடிக்குப் பலியாகிவிட்டால் அவர்களின் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கும் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இல்லை. எனினும், பணியாளர் பற்றாக்குறை முதலான நிர்வாகத் தடைகளால் இப்படிச் சில வழக்குகள் முடிவின்றி நீள்கின்றன.

இதுபோன்ற வழக்குகளில் காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்களைத் தமிழக அரசு சரிசெய்ய முன்வர வேண்டும்.
முதியோரைக் குறிவைத்து ஏமாற்றுவது சமூகத்துக்குப் பெரியதொரு சவாலாக உருவெடுத்திருப்பதை இந்த வழக்கு உணர்த்துகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை இழப்பீடு அளிப்பது இதுவே இறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுக் கடும் தண்டனைக்கு உள்ளாவது இனியாவது உறுதிசெய்யப்பட வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x