Published : 09 Sep 2025 06:23 AM
Last Updated : 09 Sep 2025 06:23 AM

டெட் தேர்வு: மாணவர் நலனே முன்னிறுத்தப்பட வேண்டும்

சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் ‘டெட்’ தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளாகப் பேசுபொருளாக மட்டுமே இருந்த இந்த விவகாரத்தில், மாநில அரசுகள் ஒரு முடிவை நோக்கி நகர இத்தீர்ப்பு வழிவகுத்திருக்கிறது.

2009இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் (RTE), பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அடிப்படை உரிமையாக வழங்கியது. இதன் தொடர்ச்சியாக 2011இல் ஆசிரியர் தரத்துக்குக் தேசிய அளவில் ஒரே சீரான அளவுகோலை நிறுவ தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) புதிய விதிகளை உருவாக்கியது.

இதன்படி மாநிலங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டன. என்றாலும் 2011க்கு முன்பாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், அவர்களின் பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு அவசியமா என்கிற கேள்வி எழுந்தது.

மேலும் 2014இல் கல்வி உரிமைச் சட்டத்திலிருந்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்ததால், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேவையா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்த அம்சங்களை வைத்துப் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இத்தீர்ப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.

இந்தச் சூழலில் தற்போது 2011க்கு முன்பாக ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கும், அவர்களின் பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்வரும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிக்க டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், டெட் தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் முக்கியப் பகுதி என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு டெட் தேர்வு பொருந்துமா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவும் பரிந்துரை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், 1 - 5 ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர்கள், 6 - 8 வரையிலான பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், 2011க்கு முன்பு தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்த சுமார் 1.70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்கிற கவலை எழுந்திருக்கிறது.

ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. படித்து, பட்டம் பெற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆசிரியரான பிறகும் மீண்டும் டெட் தேர்வை ஏன் எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆசிரியர்கள் பக்கம் அரசு நிற்கும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸும் அறிவித்திருக்கிறார். இத்தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு கோரும் வாய்ப்புகளும் உள்ளன.

இவ்விஷயத்தில் சட்டம் சார்ந்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டாலும், பள்ளிகளில் தரமான கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆசிரியர்கள் போதுமான தகுதியுடனும் மாறிவரும் சூழலுக்கு ஏற்பக் கற்பிக்கும் திறனுடனும் இருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

அவர்களுடைய சம்பள நிர்ணயம் குறித்த திட்டவட்டமான நடைமுறைகளும் தேவை. நீதிமன்றமோ, அரசுகளோ எந்த முடிவை நோக்கி நகர்ந்தாலும், அது மாணவர்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x