Published : 11 Aug 2025 06:58 AM
Last Updated : 11 Aug 2025 06:58 AM

மாநிலக் கல்விக் கொள்கை: தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்கிறதா?

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாநிலக் கொள்கையில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி முறையை உறுதிசெய்வது, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்துசெய்யப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடிநிலைக் காலக்கட்டத்தில் இந்திரா காந்தி அரசால் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மீண்டும் அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற குரல்கள் ஒலித்துவரும் நிலையில், 2020இல் மத்திய அரசு அறிவித்த புதிய தேசியக் கல்விக் கொள்கை சர்ச்சைக்குள்ளானது.

அந்தக் கல்விக் கொள்கையை ஏற்கத் தமிழக அரசு மறுத்தது. 2021இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசு, மாநிலத்துக்கு எனத் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

தற்போது தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் மாநிலத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாகத் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பு, கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துவது, 1 - 8 வகுப்பு முதல் கட்டாயத் தேர்ச்சி, திறன் அடிப்படையிலான மதிப்பீட்டில் தேர்ச்சி, 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வைத் தொடர்ந்து நடத்துவது, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து, உடற்கல்விக்கு முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே இருமொழிக் கொள்கை மூலம் மேம்பட்ட படிநிலையைத் தமிழகம் அடைந்திருப்பதை மறுக்க முடியாது. இடையில் புகுத்தப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இந்தக் கல்வியாண்டு முதல் ரத்துசெய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தொடர்ந்து 10, 11, 12 என மூன்று ஆண்டுகளும் பொதுத் தேர்வு என்கிற மன அழுத்தம் மாணவர்களுக்கு ஏற்படுவதைப் போக்க இது உதவும். 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை இடைநிற்றல்களைக் குறைக்க உதவும் என்றாலும், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மனப்பாடம் அடிப்படையிலான மதிப்பீட்டை நீக்கிவிட்டு, பாடத்தைப் புரிந்துகொண்டு சிந்தனைத் திறன் மூலம் அறிவைப் பெறும் முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்.

அதேநேரத்தில், அதற்கேற்பப் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது போன்றவற்றையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும். இந்தக் கல்விக் கொள்கை மாநிலப் பள்ளிக் கல்விக்கென மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

உயர் கல்விக்கெனத் தனியாக ஒரு கொள்கை வெளியிடப்படுமா? மேலும் பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் தனியார் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிக முதலீடுகளை இத்துறையில் அரசு செய்ய வேண்டும் என்று நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு பரிந்துரை செய்திருந்தது. இதுபோன்ற அம்சங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இதுபோன்ற கொள்கைகளை உருவாக்குவது, அரசு எந்தத் திசைவழியில் பயணிக்கப் போகிறது என்பதை உணர்த்தும். அதற்கேற்பத் தொலைநோக்குப் பார்வையை அரசுக் கொள்கைகள் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் மக்கள் நலன் சார்ந்தவற்றைச் சிரத்தையுடன் செயல்படுத்தவும் வேண்டும். அப்படியில்லாமல் தற்போது நடைமுறைப்படுத்திவரும் அம்சங்களையே கல்விக் கொள்கையாக வெளியிடுவதால், என்ன பயன் கிடைக்கப்போகிறது என்கிற கேள்வி வலுவாக எழுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x