Published : 03 Jul 2025 07:01 AM
Last Updated : 03 Jul 2025 07:01 AM
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், வரதட்சணை என்கிற சமூகக் குற்றத்துக்கு இன்னும் எத்தனை பெண்களைப் பலி கொடுக்கப் போகிறோம் என்கிற வேதனையை ஏற்படுத்துகிறது.
இந்தியச் சமூகத்தில், வரதட்சணைக் கொடுமையால் பல பெண்கள் கொல்லப்படுவதும் தற்கொலை செய்யத் தூண்டப்படுவதும் பல காலமாக நடந்துவருகின்றன. 1961, மே 1 அன்று வரதட்சணைத் தடைச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும், இந்தச் சட்டத்தால், வரதட்சணைக் கொடுமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்துள்ளது.
2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 பெண்கள் வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கொல்லப்படுகின்றனர் அல்லது தற்கொலை செய்துகொள்கின்றனர். 2021இல் தமிழ்நாட்டில் பெண்களை இலக்காகக் கொண்டு 2,421 குற்றங்கள் பதிவாகின; அவற்றில் வரதட்சணைக் கொடுமை தொடர்பான உயிரிழப்புகள் 27, கணவர் / அவரது குடும்பத்தினரால் பெண் துன்புறுத்தப்பட்ட வழக்குகள் 875 என ‘ஐஜேஏஆர்எஸ்சிடி’ என்கிற இணைய இதழ் கூறுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நிலைமை பெரிதாக மேம்பட்டுவிடவில்லை. நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்ருதி, திருமணமான ஆறு மாதங்களுக்குள் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஸ்ருதி முன்னதாகத் தன் தாயிடம் பேசியதன் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. ஸ்ருதியின் மாமியார் அவரைக் கொடுமைப்படுத்தி வந்ததற்கும் வரதட்சணைக் கொடுமைக்கும் அந்தப் பதிவு சாட்சியமாக இருந்தது.
ஸ்ருதியைப் போலவே ரிதன்யாவும் (27) தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் ரிதன்யா. இவரது தந்தை அண்ணாதுரை ரியல் ஸ்டேட் துறையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
ரிதன்யாவுக்கும் பழங்கரை என்னும் ஊரைச் சேர்ந்த கவின்குமாருக்கும்(29) மூன்று மாதங்களுக்கு முன் திருமணமானது. ரிதன்யா குடும்பம், 300 பவுன் தங்க நகையும் ரூ.70 லட்சம் மதிப்புள்ள காரும் வரதட்சணையாக அளித்ததாகவும் கூடுதலாக 200 பவுன் நகை கேட்டு கவின்குமாரும் அவரது பெற்றோரும் ரிதன்யாவைத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
திருமணமான சில நாள்களிலேயே கணவர் வீட்டில் தான் துன்புறுத்தப்படுவது குறித்து ரிதன்யா பெற்றோரிடம் முறையிட்டிருக்கிறார். அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசியும் ரிதன்யாவுக்கு நம்பிக்கை ஊட்டியும் அனுப்பியிருக்கின்றனர். எனினும், புகுந்த வீட்டில் நடந்த கொடுமைகள் ரிதன்யாவின் மரணத்துக்கு வழிவகுத்திருக்கின்றன.
ரிதன்யா இறப்பதற்கு முன், ‘கணவரும் அவரது தாய் தந்தையும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினர்’ எனத் தன் தந்தைக்கு வாட்சப்பில் குரல்வழிச் செய்தி அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
துன்புறுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கவின்குமாரும் அவர் தந்தை ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்வரமூர்த்தி குறிப்பிட்ட கட்சியில் உள்ளதால், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வழக்கிலிருந்து தப்பிக்கும் சாத்தியம் உள்ளது என்கிற ரிதன்யா தரப்பினரின் முறையீட்டை ஒதுக்க முடியாது.
தற்கொலையை முன்கூட்டியே தெரிவிக்கும் ரிதன்யாவின் குரல் பதிவுகள்தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களில் பேசுபொருளாக்கியிருக்கிறது. படித்த பெண்கள்கூட இப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றனரே என ஒரு நிமிடத் தீர்ப்போடு நாம் கடந்து சென்றுவிடக் கூடாது.
திருமண வாழ்க்கையில் பெண்ணே கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியவள் என்கிற மனநிலை முதலில் மாற வேண்டும். திருமணத்தை ஒரு வியாபாரமாகக் கருத வைக்கும் வரதட்சணை முறை மீதான அருவருப்பு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஸ்ருதியோ, ரிதன்யாவோ இருப்பதை மறந்துவிடக் கூடாது. ஒட்டுமொத்தச் சமூகத்திலும் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே வரதட்சணைக் கொடுமைக்குத் தீர்வு காண முடியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT