Published : 24 Jun 2025 07:38 AM
Last Updated : 24 Jun 2025 07:38 AM

இஸ்ரேல் - ஈரான் போர்: சாமானிய இந்தியருக்குச் சுமை ஏற்றிவிடக் கூடாது!

இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்துவரும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில், கச்சா எண்ணெய்யைப் பெருமளவு இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, நிலைமையைக் கவனமாகக் கையாண்டு, நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கச்சா எண்ணெய்த் தேவையில் 88% இறக்குமதியைத்தான் சார்ந்திருக்கிறது. அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்வதில் உலகத்திலேயே மூன்றாவது பெரிய நாடு இந்தியாதான். மேற்கு ஆசியாவிலிருந்துதான் பெருமளவு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.

இத்தகைய சூழலில், மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் போர், எண்ணெய் விலை குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது. இதற்கிடையே, ஈரான் மீது அடுத்தடுத்துப் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிப்பதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் உருவாகியிருக்கிறது.

போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஈரான் அருகே உள்ள ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமான மஜ்லிஸ் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. ஈரானின் தேசியப் பாதுகாப்பு உச்ச கவுன்சில் இதை அங்கீரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாரசீக வளைகுடாவுக்கும், ஓமன் வளைகுடா, அரபிக் கடலுக்கும் இடையில் ஒரு வர்த்தக வழியாக இந்த நீரிணை திகழ்கிறது.

உலக நாடுகளின் 20 சதவீத எண்ணெய் / எரிவாயு இறக்குமதிக்கு இந்த நீரிணையே முதன்மையானது. இந்தியாவுக்கும் பெருமளவு கச்சா எண்ணெய் இந்தப் பாதை வழியேதான் கொண்டுவரப்படுகிறது. ஓபெக் அமைப்பின் உறுப்பு நாடுகளான சௌதி அரேபியா, இராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்றவை இந்த நீரிணையைப் பயன்படுத்தித்தான் எண்ணெய் ஏற்றுமதி செய்துவருகின்றன. குறிப்பாக, ஆசியாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்ல இந்த நீரிணைதான் முதன்மை வழி என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்திருக்கிறது இந்தியா. மே மாதத்தில் தினமும் 19 லட்சம் பீப்பாய் எண்ணெய்யைத்தான் இந்தியா இறக்குமதி செய்தது. ஜூன் மாதத்தில், தினமும் ஏறக்குறைய 22 லட்சம் பீப்பாய் எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இதுவே அதிகம். குறிப்பாக இராக், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் எண்ணெய் இறக்குமதியைவிட இது இரண்டு மடங்கு.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர், உக்ரைனிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை மேற்கத்திய நாடுகள் கணிசமாகக் குறைத்துக்கொண்ட நிலையில், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சலுகை விலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவந்தது இந்தியா. தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

அதேபோல், அமெரிக்காவிடமிருந்து தினமும் இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவு மே மாதத்தைவிட (2.80 லட்சம் பீப்பாய்கள்), ஜூன் மாதத்தில் 4.39 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை தற்போது 77.32 டாலராக (ரூ.6,708) இருக்கிறது. ஒருவேளை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், ஒரு எண்ணெய் பீப்பாயின் விலை 400 அமெரிக்க டாலராக (ரூ.34,706) அதிகரிக்கக்கூடும்.

ஏற்கெனவே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதில்லை என்கிற விமர்சனங்கள் உண்டு. தற்போது நிலவும் போர்ச் சூழலை இந்தியா கவனமாகக் கையாள வேண்டும். உலகின் இன்னொரு மூலையில் நடக்கும் போரின் சுமை சாமானிய இந்தியர்கள் மீது விழுந்துவிடாமல் அரசு காக்க வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x