Published : 10 Apr 2025 11:27 AM
Last Updated : 10 Apr 2025 11:27 AM

10 மசோதாக்களுக்கு ஒப்புதல்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த மசோதாக்களுக்குத் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு’ எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆளுநர்கள் நடந்துகொள்வதாக காங்கிரஸ் காலத்திலிருந்தே புகார்கள் உண்டு. தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன; நீதிமன்றங்களையும் அணுகியிருக்கின்றன. பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அண்மைக்காலமாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா, சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு அணுகிய நிலையில், இந்த மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினார். சட்டப்பேரவையில் அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மீண்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இவ்விஷயத்தில் சுமுகத் தீர்வை எட்ட ஆளுநரைச் சந்தித்துத் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கின்றனர். எனினும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே, குடிமைப் பணித் தேர்வுக்காகத் தயாராகிவரும் இளைஞர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆளுநர் ஒரு தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாகப் பொருள்” என்று பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு அந்த 10 மசோதாக்களும் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது; மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டியதற்கான கால வரையறையையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. மிக முக்கியமாக, மாநில அரசின் நண்பராகவும் நடுநிலையாளராகவும் வழிகாட்டியாகவும் ஆளுநர் இருக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் உணர்த்தியிருக்கிறது.

ஓர் அரசமைப்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும் என்கிற அம்பேத்கரின் வார்த்தைகளை நீதிபதி பர்திவாலா மேற்கோள் காட்டியிருப்பது அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் மீதான நீதித் துறையின் அக்கறையை நிலைநாட்டுகிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருப்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டமானது, தேர்தல்கள் மூலம் ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரத்தை வழங்குகிறது. எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும், மாநிலங்களின் உரிமைகளை வலியுறுத்தும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஊக்கமடைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இதேபோன்ற வழக்கு ஒன்றில் இந்தத் தீர்ப்பைக் கேரள அரசு சுட்டிக்காட்டியிருப்பது ஓர் உதாரணம்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது, தீர்ப்பை எதிர்கொள்ள அவசரச் சட்டம் கொண்டுவருவது என்பன போன்ற வாய்ப்புகள் மத்திய அரசுக்கு இருக்கின்றன. எனினும், இந்தத் தீர்ப்பை ஓர் ஆக்கபூர்வமான ஆலோசனையாக ஏற்றுக்கொண்டு மாநில அரசுகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்வதுதான் ஆரோக்கியமான அரசியலை உறுதிசெய்யும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x