Published : 18 Mar 2025 10:54 AM
Last Updated : 18 Mar 2025 10:54 AM
பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனது முதல் சிம்பொனி இசைக்கோவையை அரங்கேற்றியிருப்பதன் மூலம், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக் குழு, ஓர் இந்தியரின் முழு சிம்பொனியை இசைத்தது இதுவே முதல் முறை என்பது இந்த இசைச் சாதனைக்கு இன்னொரு இனிய ஸ்வரத்தைச் சேர்த்திருக்கிறது.
1976இல் ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, திரையிசையில் புகுத்திய புதுமைகள், நிகழ்த்திய சாதனைகள் தென்னிந்தியா முழுவதும் அறியப்பட்டவைதான்.
கிராமிய இசை, கர்னாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றுடன் உலகின் பல்வேறு இசை வடிவங்களிலும் மேதைமை கொண்ட இளையராஜா, வளமான இசைக்கூறுகளைக் கொண்ட தனது பாடல்கள் மூலமும், திரைக்கதைக்கு நிகரான இசை மொழி கொண்ட பின்னணி இசைக்கோவைகள் மூலமும் நூற்றுக்கணக்கான படங்களுக்கு வணிக வெற்றி தேடித்தந்தார்; திரையிசை ரசனையையும் வளர்த்தெடுத்தார்.
மேற்கத்திய செவ்வியல் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளையராஜா, சிம்பொனி என்னும் இசை வடிவத்தின் கூறுகளுடன் கூடிய பாடல்களையும் இசைக்கோவைகளையும் உருவாக்கினார். ‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ போன்ற தனியிசைத் தொகுப்புகளில் தனது மேற்கத்திய இசை மேதைமையை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, 1993இல் லண்டனில் ராயல் பில்ஹார்மானிக் இசைக் குழுவைக் கொண்டு ஒரு சிம்பொனி இசைக்கோவையைப் பதிவுசெய்திருந்தார். முன்னதாக, மைக் டெளனெண்ட் போன்ற இசை வல்லுநர்கள் சென்னைக்கு வந்து அவரது இசைத் திறனை நேரடியாகக் கண்டு அவரது சிம்பொனி பயணத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
எனினும், சில காரணங்களால் அந்த இசைக்கோவை வெளியிடப்படவில்லை. தற்போது தனது முதல் சிம்பொனி என்னும் அடையாளத்துடன் ‘வேலியன்ட்’ என்னும் சிம்பொனி இசைக்கோவையை 2024இல் இளையராஜா உருவாக்கினார். புகழ்பெற்ற ‘ராயல் ஸ்காட்டிஷ் நேஷனல் ஆர்கெஸ்ட்ரா’ என்னும் இசைக்குழு இளையராஜாவின் சிம்பொனியை வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்திருந்த நிலையில், 2025 மார்ச் 8இல் லண்டனில் உள்ள ‘ஈவென்டிம் அப்போலோ’ அரங்கில் அந்த இசைக்கோவையை ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக் குழு மூலம் அரங்கேற்றியிருக்கிறார் இளையராஜா. இதன் மூலம் பீத்தோவன், மொஸார்ட், சைக்கோவ்ஸ்கி, ஷூபர்ட் போன்ற இசை மேதைகளின் பட்டியலில் இளையராஜாவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
பண்ணைபுரம் என்னும் எளிய கிராமத்திலிருந்து வந்து தனது சுய முயற்சியின் மூலம் இசையைக் கற்றுக்கொண்டு திரையிசையின் எல்லைகளை விஸ்தரித்து, மேற்கத்திய இசை மேதைகளின் வரிசைக்கு நகர்வது என்பது அசாத்தியமான ஒரு சாதனை. பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் தனது இசைப் பணியை, உன்னதமான அர்ப்பணிப்புடன் இடைவிடாமல் முன்னெடுத்துச் செல்லும் ஆளுமை என்பதால்தான் இதை இளையராஜாவால் சாதிக்க முடிந்திருக்கிறது.
இதில் வயது, முதுமை, உறவுகளின் இழப்பு, கடும் விமர்சனங்கள் என எல்லாவற்றையும் தாண்டி தனது இலக்கை நோக்கிய பயணத்தை இளையராஜா வகுத்துக்கொண்டிருக்கிறார். எந்தத் துறையைச் சேர்ந்தவரும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடம் இது.
இத்தகைய சாதனையைச் செய்திருக்கும் இளையராஜாவுக்குத் தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவரைக் கௌரவிக்கும் வகையில் அவரது பெயரைத் தாங்கிச் சிறப்பாய்வு மையம் /பல்கலைக்கழகம்/இசை ஆவணக் காப்பகம் அமைப்பது, அவரது பெயரில் விருது, அவரது படைப்புகள் குறித்த ஆய்வுத் தொகுப்பு, இசை சார்ந்த புரிதலை இன்னும் பரவலாக எடுத்துச்செல்லும் முயற்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும். அத்துடன், ‘வேலியன்ட்’ சிம்பொனி இங்கும் இசைக்கப்பட, தமிழக அரசும் மத்திய அரசும் முயல வேண்டும். இளையராஜாவுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT