Published : 26 Jul 2018 09:06 AM
Last Updated : 26 Jul 2018 09:06 AM
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் சமைக்கும் உணவைத் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்; எனவே பாப்பாள் சத்துணவு சமைக்கக் கூடாது என்று அங்குள்ள கவுண்டர் சமூகத்தின் ஒரு பகுதியினர் சொன்னதும், பாப்பாளை வேறு பள்ளிக்கு இடம் மாற்ற அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதைச் சாதித்ததும் இந்தப் பிரச்சினையின் மையம். பாப்பாளுக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்க வேண்டிய பள்ளி நிர்வாகமும், வட்ட வளர்ச்சி அலுவலகமும், அதிகாரிகளும் இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கும் அவருடைய வெளியேற்றத்துக்கும் துணை நின்றிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையின் உச்சம். முன்னதாக, பாப்பாள் எங்கெல்லாம் பணியமர்த்தப்பட்டாரோ, அங்கெல்லாமும் தீண்டாமையை எதிர்கொண்டிருக்கிறார், தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில்தான் அவரால் பிரச்சினை இல்லாமல் வேலை செய்ய முடிந்திருக்கிறது என்று அவர் வெளிக்கொணரும் உண்மைகள் நாம் எந்தக் காலத்தில், எந்த மாதிரியான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை உருவாக்குகிறது. செய்தி வெளியானதும் பல்வேறு அமைப்புகளும் கடுமையான எதிர்வினையாற்றியதன் தொடர்ச்சியாக அரசு மீண்டும் அதே பள்ளியில் பாப்பாளைப் பணியில் அமர்த்தியிருக்கிறது என்றாலும், இது போதாது. பாப்பாளை வன்கொடுமைக்கு ஆளாக்கியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முக்கியமாக இந்தக் கொடுமைக்குத் துணைபோன பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மீது தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாப்பாள் புகாரை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முழுக்க பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் எப்படி செயலாக்கப்படுகிறது, எங்கேனும் இதேபோல தீண்டாமைக் கொடுமை நடக்கிறதா என்பது தொடர்பில் அரசு ஆய்வு நடத்த வேண்டும். தீண்டாமைக்கு எதிரான, கூட்டுறவுக்கான செயல்பாடுகளை முதலில் பள்ளிக்கூடங்களில் எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பது குறித்தும் அரசு யோசிக்க வேண்டும். ஒரு காலகட்டம் நெடுகிலும் தீண்டாமைக்கு எதிரான களப் பணிகளை அரசும் பொது அமைப்புகளும் நடத்திவந்தன. நாம் திரும்பவும் அந்தப் பணிகளைக் கையில் எடுக்க வேண்டுமோ என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரத்தில் அரசுக்கு வெளியே சமூக நல அமைப்புகளும் ஒன்றோடு ஒன்று கை கோக்க வேண்டும். ‘தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்பது எழுத்தாக எழுதப்படுவதில் அல்ல; அரசின் நடவடிக்கைகளின் வழி சமூகத்தில் நிறுவப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT