Published : 03 Jul 2018 09:19 AM
Last Updated : 03 Jul 2018 09:19 AM

உயர் கல்விச் சீர்திருத்தம்: விரிவான ஆலோசனை அவசியம்!

ல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யூஜிசி) மாற்றாக, தேசிய உயர் கல்வி ஆணையம் (எச்இசிஐ) அமைப்பது தொடர்பான மசோதாவை மத்திய அரசு தயாரித்திருக்கிறது. அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளும் தொழில் திறனும் அவசியம் என்ற நிலையில் இப்படியொரு மசோதா தயாரிக்கப் படுவது அவசியம். அதேசமயம், மனிதவள ஆற்றலை மேம்படுத் தும் விஷயத்தில் மிகப் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த மசோதா, இதுவரை இருந்த நல்ல அம்சங்களைக் குலைக்கும் வகையில் அல்லாமல், மிகக் கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, மொத்தம் 20 பல்கலைக் கழகங்களும் 500 கல்லூரிகளும்தான் இருந்தன. உயர் கல்வி அமைப்பைச் சீர்திருத்த நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டன, சட்டங்களும் இயற்றப்பட்டன. அனைவருக்கும் உயர் கல்வி பயில வாய்ப்பு, அனைவருக்கும் எட்டும் வகையில் உயர் கல்விக்கூடங்களின் அதிகரிப்பு, சுயாட்சித்தன்மை ஆகியவை பரிந்துரைகளில் வலியுறுத்தப்பட்டன. இவற்றின் அடிப்படையிலேயே யூஜிசி அமைக்கப்பட்டது. இவற்றையெல்லாம், தேசிய உயர் கல்வி ஆணையம் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கல்வியாளர் கள் எதிர்பார்க்கிறார்கள்.

கல்வி மானியம் அளிப்பது தொடர்பாக யூஜிசியிடம் இருந்த அதிகாரத்தை, மனிதவள ஆற்றல் வளர்ச்சித் துறையிடமோ தனி அமைப்பிடமோ வழங்க இந்த மசோதா வகை செய்வதைக் கல்வி வட்டாரங்கள் ஆட்சேபிக்கின்றன. கல்வி மானியம் அளிப்பதில் யூஜிசியின் செயல்பாடுகளில் சில விமர்சனங்கள் இருந்தாலும், அதில் அரசியல் தலையீட்டுக்கான வாய்ப்புகள் குறைவு. அந்த அதிகாரத்தை மனிதவள ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கும்போது அரசியல் கண்ணோட்டத்துடன் நிதியைப் பிரித்தளிக்கக்கூடிய நிலை ஏற்படும். இது கல்வித் துறை வளர்ச்சிக்கு நல்லதல்ல. கல்வியாளர்களின் இந்த வாதத்தை மத்திய அரசு கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களால் பொருளாதாரம் பாதிக்கப்படுவது கல்விக்குப் பெரிய சவாலாக விளங்குகிறது. இந்த மாற்றத்துக்கேற்ப திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்குவது ஆணையத்தின் பொறுப்பாகும். தரமில்லாமல், போலியாக பயிற்சி தந்து மாணவர்களை உருவாக்கும் பட்டதாரி தொழிற்சாலைகளை யும் மோசடி நிறுவனங்களையும் களையெடுக்க புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டிருப்பது ஆக்கபூர்வமான முயற்சியாகும். கடந்த 30 ஆண்டுகளாக உயர் கல்வி விரிவாக்கத்தில் வெறும் வணிக நோக்கமே முதன்மை இடத்தில் இருந்துவந்திருக்கிறது. இதை மாற்றுவது அவசியம்.

இதன் ஆலோசனைக் குழுவில் மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எல்லாவற்றிலும் மத்திய அரசின் முடிவே இறுதியானது என்றாலும் இதற்கு கூட்டாட்சித்தன்மை ஏற்பட இந்தப் பிரதிநிதித்துவம் உதவும். இந்த மசோதா வின் சில அம்சங்கள் தனியாருக்குச் சாதகமாக இருப்பதாக அரசியல் தலைவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். அதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வியாளர்கள், பேராசிரியர்கள், குடிமைச் சமூகங்கள் யோசனைகளையும் திருத்தங்களையும் தெரிவிக்க அவகாசம் தரப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x