Published : 12 Jun 2018 10:08 AM
Last Updated : 12 Jun 2018 10:08 AM
ஐ
ரோப்பியப் பொருட்கள் மீது அமெரிக்கா காப்பு வரியை அதிகப்படுத்தினால் 25% காப்புவரியை நாங்களும் விதிப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.22,400 கோடி. அமெரிக்கா விற்கும் மோட்டார் பைக்குகள், ஜீன்ஸ் துணிகள் உட்பட அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனி உச்சபட்ச வரி விதிப்புக்கு உள்ளாகும். அமெரிக்க அதிபர் டிரம்பின் தடாலடி நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்த பரஸ்பர காப்புவரி விதிப்புகளால், அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உள்ள நுகர்வோர்கள் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க நேரும்.
அமெரிக்காவின் உருக்கு, அலுமினியத் தொழிற்சாலைகளைக் காக்க ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, கனடாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு மீது 25%, அலுமினியம் மீது 10% காப்புவரியை விதித்தார் டிரம்ப். இதைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் பதிலடி நடவடிக்கையில் இறங்கியிருக் கிறது. ஆனால், இந்த வர்த்தகப் போரானது சீனாவின் உருக்கு, அலுமினியம் மீது அமெரிக்கா காப்புவரி விதித்தபோது தொடங்கிவிட்டது. டிரம்ப் அதிபராவதற்கு அமெரிக்க ஆலைத் தொழிலாளர்களின் ஆதரவு முக்கிய காரணமாக இருந்தது. எனவே, தன்னை ஆதரித்தவர்களுக்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் பெரிய வர்த்தகக் கூட்டாளிகள், அதன் காப்புவரி விதிப்பை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். பதிலுக்கு அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை அதிகப்படுத்துவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். வர்த்தகப் போரில் எந்த நாடும் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. மாறாக, அது பரஸ்பர வர்த்தகத்தை மட்டுமல்லாது தொழிற்சாலை உற்பத்திகளையும் மெல்ல மெல்ல குறைத்து அழித்துவிடும். விலைவாசி உயர்வால் மக்கள் நுகர்வைக் குறைத்துக்கொள்வார்கள். அது நாளடைவில் பொருள் உற்பத்தியைச் சரித்துவிடும். 10 ஆண்டுகளுக்கு முன்னால் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, சர்வதேச வர்த்தகம் சரிந்ததைப் போல இப்போது மீண்டும் சரிந்துவிடும் என்று உலக வங்கியும் உரிய நேரத்தில் எச்சரித்திருக்கிறது. இந்த வர்த்தகப் போரானது முதலில் தொடங்கியவரையும், பதிலுக்கு வரி உயர்த்திய நாடு களையும் இழப்புக்குள்ளாக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சரியாகவே எச்சரித்திருக்கிறார்.
பதிலுக்குப் பதில் காப்புவரி விதிக்காத நாடுகளைச் சேர்ந்த சில குழுக்களும் நுகர்வோர்களும் மட்டுமே இதில் தப்பிப்பார்கள். அவர்களுமே உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் மந்தமடைந்தால் இழப்புக்கு ஆளாவர். இது ஒரு விஷ வட்டம் என்பதால், உள்நாட்டுத் தொழில், வர்த்தகத்தைக் காப்பது எனும் பேரில் காப்புவரி விதிக்கும் நடவடிக்கையை எல்லா நாடுகளும் கைவிடுவதே உலக நன்மைக்கு உகந்தது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT