Published : 05 Jun 2018 10:02 AM
Last Updated : 05 Jun 2018 10:02 AM
கோ
டை வழக்கம்போலவே வறட்சியையும் கூடவே தண்ணீர் பற்றாக்குறையையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறது. நாடு முழுக்கவே தண்ணீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பாசனத்துக்கு மட்டுமில்லை, குடிநீருக்கே பல மாநிலங்களில், நகரங்களில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. மாநில அரசாங்கங்கள் கிராமங்களின் தலையில் கையை வைத்து, நகரங்களின் தாகத்தைத் தீர்க்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன. பல மாநிலங்களில் நதி நீர் பகிர்வு தொடர்பில் ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொள்ளும் சத்தங்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையோ, அதற்கான சமிக்ஞைகளையோ எங்கேயும் காண முடியவில்லை.
ஒரு வருஷத்துக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றி மாற்றி விவசாயிகளின் போராட்டக் குரல்கள் கேட்டபடியே இருக்கின்றன. விவசாயிகளின் போராட்டங்களுக்கும் விவசாய நீர்த் தேவைகளுக்குமான உறவை அரசு பொருட்படுத்துவதாய்த் தெரியவில்லை. வறட்சியைச் சந்திக்கும் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு முறை தென்மேற்குப் பருவமழைக் காலம் நெருங்குகையிலும் இந்த மழைக் காலத்தையேனும் பயன்படுத்தி, வறண்டு கிடக்கும் ஆறுகளுக்கும் ஓடைகளுக்கும் புத்துயிர் ஊட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடனே அரசை எதிர்நோக்குகிறார்கள். ஆனால், ஏமாற்றம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.
பெருகிக்கொண்டேயிருக்கும் மக்கள்தொகை, விரிந்துகொண்டேயிருக்கும் நகர்மயமாக்கல் சூழலில் கிராமங்களை அவற்றின் நிலைகுலைவிலிருந்து காக்கத் தண்ணீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பது மிக மிக முக்கியமானது. விவசாயிகளும் விவசாயமும் இல்லையென்றால், கிராமங்கள் அனாதையாகிவிடும். கிராமங்களின் சீர்குலைவு நகரங்களின் நிம்மதி குலைவாக மாறும். நீர் மேலாண்மைத் திட்டங்களை அரசு முன்னெடுத்தால், சமூகத்தின் பல்வேறு குழுக்களும் அதில் கை கோக்கும் சாத்தியங்கள் இன்று அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா முன்னெடுத்த மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்புத் திட்டக் கட்டுமானத்தை உருவாக்குதல் என்பது இந்தப் பணிகளின் தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். பாசன வாய்க்கால்களைச் சீரமைத்தல், நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீராதாரங்களைப் பெருக்குதல், நதிநீர் மேலாண்மை, பகிர்வுக்கான அமைப்புகள் என்று விரிவாக்கலாம். அதேபோல, மக்களிடமும் சிக்கன நீர்ப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். விவசாயிகளுக்குத் தண்ணீரைச் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கொண்டுசேர்க்க வேண்டும். உரிய கருவிகளையும் அரசு வழங்க வேண்டும்.
எந்த ஒரு விஷயத்தையும்விட அதிஅவசரமாக இந்திய அரசு அக்கறையுடன் கவனிக்க வேண்டிய விவகாரம் இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT