Published : 11 Jun 2018 09:21 AM
Last Updated : 11 Jun 2018 09:21 AM
இ
த்தாலியில் அரசியல் சூறாவளி ஒருவழியாக முடிவுக்குவந்திருக்கிறது. மார்ச் 4-ல் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல், தொங்கு நாடாளுமன்றம் அமைந்த சூழலில், பல்வேறு அரசியல் குழப்பங்களை இத்தாலி சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நூலிழையில் பெரும்பான்மையைப் பெற்றுப் பிரதமராகியிருக்கிறார் சட்டத் துறை முன்னாள் பேராசிரியரான சுசெப்பே காண்டே. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பாலோ சவோனா நிதியமைச்சராக நியமிக்கப்படுவதைத் தடுக்கும்வகையில் மாத்தரெல்லா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது அரசியல் சூறாவளிக்கு வித்திட்டது.
புதிதாகத் தேர்தலை நடத்தத் திட்டமிட்ட அதிபர் மாத்தரெல்லா, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் முன்னாள் அதிகாரியைத் தற்காலிகப் பிரதமராக நியமிக்கவும் விரும்பினார். ஆனால், ஐந்து நட்சத்திர இயக்கம் மற்றும் அதிதீவிர வலது கூட்டமைப்பு ஆகியவற்றின் துணையுடன் பிரதமராகியிருக்கிறார் சுசெப்பே காண்டே. அதிபர் திட்டப்படி தேர்தல் நடந்திருந்தால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான கூட்டணியைச் சேர்ந்தவர்கள், நேரத்தை வீணடிக்காமல் அதிபரின் நடவடிக்கைகளைத் தங்களது கருத்துக்கு ஆதரவு தேடப் பயன்படுத்திக்கொண்டனர். பிரான்ஸும் ஜெர்மனி யும் இத்தாலியை இயக்குவதாகக் குற்றம்சாட்டியதோடு, மாத்தரெல்லாவைப் பதவியிலிருந்து நீக்கவும் அழைப்புவிடுத்தனர்.
இத்தாலியில் நிலையான அரசு அமைந்ததைத் தொடர்ந்து, சந்தை யும் உச்சத்தை எட்டியிருக்கிறது. இத்தாலியக் கடன் பத்திரங்கள், சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்திருக்கின்றன. பங்கு விலைகள், இத்தாலியில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதுமே வீழ்ந்திருக்கின்றன. இதை யடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானவர்கள் தங்கள் குரலைச் சற்றே தணித்துக்கொண்டனர்.
செலவினங்களுக்குத் தேவையான வருவாய்களை அதிகரிப்பதற்குத் திட்டங்கள் இல்லாமல், சந்தையும் ஐரோப்பிய ஒன்றியமும் நிலை குலைந்துபோய்விட்டன. வளர்ச்சி வேகம் மந்தமாக இருந்தபட்சத்திலும்கூட, பொருளாதாரப் பேராசிரியர் ஜியோவன்னி ட்ரியா நிதியமைச்சராகப் பதவியேற்க அதிபர் சம்மதித்ததால், அனைத்துப் பக்கங்களிலி ருந்தும் வாய்ப்புகள் உருவாகி, உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார்பூர்வமான கணக்கெடுப்புகளின்படி, 59% இத்தாலியர்கள் யூரோவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், இருந்தாலும்கூட பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நம்பிக்கையற்றும் இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இத்தாலி விலகினால், இரண்டுமே குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்புக்கு ஆளாகும். அதிர்ஷ்டவசமாக, அத்தகைய விரும்பத்தகாத நிலை ஏற்படவில்லை. தற்போதைய நிலையில், வெகுஜன அரசியல் கூட்டணியும் வலதுசாரிக் கருத்தாக்கங்களும் சரியானதாக இருக்க முடியாது. எனினும், அது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இத்தாலியின் சில ஏமாற்றங்களைச் சுட்டிக்காட்டுவதற்கான வாய்ப்பை அளிக்கும். ஒருவேளை, வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் கொள்கைக்கும் வெகுஜன அரசியலுக்கும் இடையில் சமநிலை ஏற்படவும்கூட வாய்ப் பிருக்கிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் பிரான்ஸ், ஜெர்மனியோடு மட்டுமின்றி இத்தாலியின் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT