Published : 01 May 2018 09:57 AM
Last Updated : 01 May 2018 09:57 AM
சீ
ன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீனாவின் ஊஹான் நகரில் இரண்டு நாட்கள் நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததுடன் பரஸ்பரம் நன்றாகப் புரிந்துகொள்ளவும் வழிவகுத்திருக் கிறது. இரு நாடுகளின் பரஸ்பரப் பிரச்சினைகள், ஆசியப் பிராந்தியப் பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள் என்று அனைத்துமே விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
டோக்லாம் எல்லைப் பகுதியில் ஏற்பட்டதைப் போன்ற நேரடித் தள்ளுமுள்ளுகள் ஏற்படாதவண்ணம் இருதரப்பு ராணுவத் தள பதிகளும் நேரடித் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதுடன், உடனுக்குடன் பேசித் தீர்வுகாணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, இந்தியாவிடமிருந்து வேளாண் பொருட்களையும் மருந்து-மாத்திரைகளையும் அதிகம் வாங்கிக்கொள்ள சீனா முன்வந்திருக்கிறது. என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா சேருவதைத் தடுக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகள் என்று ஐநா அறிவிப்பதைத் தடுப்பதைக் கைவிட வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஒரே பாதை - ஒரே பிராந்தியம் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டது.
இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாகவே சமரச அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்து வந்துள்ளன. டோக்லாம் மோதல் போக்குக்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுவதை இரு தரப்புகளும் தவிர்த்தே வந்துள்ளன. 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதற்கு முன்னதாகவோ, பின்னரோ சீன ராணுவம் இந்தியப் பகுதியில் ஊடுருவியதால் ஒருவிதமான இறுக்கம் நிலவியது. இந்த முறை அப்படி ஏதும் இல்லை. புவி அரசியல்சார் கருத்து வேறுபாடுகளும் இருதரப்பு வேறுபாடுகளும் பல இருந்தாலும், நீண்ட காலம் பிடித்தாலும் சமரசப் பேச்சுகள் மூலம்தான் இரு நாடுகளும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதையே ஊஹான் சந்திப்பு வலியுறுத்துகிறது.
அமைதியையும் சமாதானத்தையும் பராமரிப்பது என்று இரு நாடுகளும் 1993-ல் உடன்பாடு செய்துகொண்ட பிறகு, 3,500 கிலோ மீட்டர் நெடிய எல்லைப் பகுதியில் ஒருமுறைகூட இரு நாடுகளும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்லை. அணு ஆயுதத்தை எடுப்போம் என்று இரு நாடுகளும் ஒருமுறைகூடக் கொக்கரித்ததில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானதாக இருக்க வேண்டும் என்ற தொனியில்தான் பரஸ்பர உறவு இருக்க வேண்டும் என்று ஊஹான் உச்சி மாநாடு வலியுறுத்தியிருக்கிறது. இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் உரிய தலைவர்களாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT