Published : 30 May 2018 08:49 AM
Last Updated : 30 May 2018 08:49 AM

பொது செயல்திட்டம் இல்லாத கூட்டணியால் பயனில்லை!

பா

ஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முனைப்புடன் இறங்கியிருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெறுவதைத் தடுக்க வேண்டும் எனும் நோக்கில், தங்கள் சித்தாந்தங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க இந்தக் கட்சிகள் முயற்சிசெய்கின்றன. கர்நாடக முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்ற விழா எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சியாக மாறியதே இதற்கு எடுத்துக்காட்டு.

இந்த மேடையில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றதல்லாமல் மாயாவதியுடன் அன்பைப் பகிர்ந்துகொண்டார். காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற பகுஜன் சமாஜ் தயார் என்பது உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலின்போதே வெளிப்பட்டது. சமாஜ்வாடி நிறுத்திய வேட்பாளர்களை மாயாவதி தானாகவே முன்வந்து ஆதரித்து வெற்றிபெற வைத்தார். தேர்தலுக்கு முன்னதாகவே எல்லா எதிர்க்கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கருத்துக்கு வலுவூட்டும் வகையில் அந்த வெற்றிகள் அமைந்தன. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரே அணியில் போட்டியிட்டால், உத்தர பிரதேசத்தில் அது வலுவான கூட்டணியாக இருப்பதுடன் வெற்றிக் கூட்டணி யாகவும் மாறிவிடும். பிற மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் சேர இது உதவிசெய்யும்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு உண்மையான சவால் எது என்றால், மக்கள் ஏற்கும்படியான கொள்கைகளைத் தயாரித்து, பொது செயல்திட்டமாக முன் கூட்டியே அறிவிப்பதுதான். பாஜகவுக்கு எதிரான கூட்டணி யில் காங்கிரஸ் தலைமையில் சேர திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆகியவை தயாராக இல்லை. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சிக்கு முக்கியப் போட்டியாளரே காங்கிரஸ்தான். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணிக்கு எதிராக திரிணமூல் போட்டியிட வேண்டிய நிலைமை வந்தாலும் வரும். கர்நாடகத்தில் கூட்டு சேர்ந்துள்ள காங்கிரஸ், மஜத இடையிலேயே உரசல்கள் தொடர்கின்றன. கேரளத்தில் இடதுசாரிகள் கடுமையாக எதிர்ப்பது காங்கிரஸ் கட்சியைத்தான்.

ஆக, பொது மேடையில் ஒன்றாகத் தோன்றுவதைவிட அதிக கடினம் உண்மையிலேயே இந்த எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதுதான். பாஜகவுக்கு எதிரான எல்லாக் கட்சிகளையும் ஒரே அணியில் இடம்பெற வைக்க காங்கிரஸ் கடுமையாக உழைக்க வேண்டும். சில தியாகங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x