Published : 25 May 2018 08:45 AM
Last Updated : 25 May 2018 08:45 AM
மே
ற்கு வங்க மாநிலத்தில் மே 14-ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வன்முறையின் துணையோடு மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தல் நடந்த தொகுதிகளில் 76% திரிணமூல் காங்கிரஸ் வசம் வந்திருக்கிறது. எனினும், மாற்றுக் கட்சியினர் போட்டியிடாத அல்லது போட்டியிட முடியாதபடி தடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தால்தான் திரிணமூலின் வெற்றி எப்படிப்பட்டது என்பது தெரியும்.
உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் சேர்த்து மொத்தம் 58,792 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பிருந்தே மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கிவிட்டன. பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை. காவல் துறை, ஆளும் கட்சியினரின் அராஜகத்தை அடக்கத் தவறியதல்லாமல், பல இடங்களில் அவர்களுக்குக் துணையிருந்ததாகக்கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். மூன்றடுக்கு உள்ளாட்சி மன்ற முறை ஏற்படுத்தப்பட்ட 1978-ம் ஆண்டு தொடங்கி, இதுவரையில் இப்படி ஒரு வெற்றி ஆளுங்கட்சிக்குக் கிடைத்தது கிடையாது. மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 34 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, இடதுசாரி முன்னணி 2011-ல் பதவியிலிருந்து இறங்கிய பின், இப்படிப்பட்ட வன் செயல்கள் மேற்கு வங்கத்தில் நடந்ததே இல்லை.
வன்செயல்களைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. நிர்வாகத் திறமை போதாத காரணத்தாலோ, அரசியல் ஆதாயம் கருதியோ இப்படி நடந்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக திடீரென பெரிய கட்சியாக வளர்ந்துவிடவில்லை. ஆனால், அது வளர்கிறது என்ற எண்ணமே திரிணமூல் காங்கிரஸை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது. இப்போதைய பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 25% இடங்களை மட்டுமே பாஜக வென்றுள்ளது. எனினும், 2021 மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யைப் பதவியிலிருந்து அகற்றுவதே தங்களுடைய லட்சியம் என்று வெளிப்படையாகவே அறிவித்துச் செயல்படுகிறது பாஜக. அதன் வளர்ச்சியால் அச்சமடைந்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கு எதிராக மாநில அளவிலும் தேசிய அளவி லும் பிற கட்சிகளை ஓரணியில் திரட்டத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கூட்டணி அல்ல; மக்களின் ஆதரவே முதன்மையானது. ஜனநாயகத்தை வீழ்த்தி பெறும் வெற்றிகள் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. எல்லாக் கட்சிகளுக்குமே இது பொருந்தும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT