Published : 03 May 2018 08:36 AM
Last Updated : 03 May 2018 08:36 AM

கொரியத் தலைவர்களின் சந்திப்பு: அமைதி திரும்பட்டும்!

டந்த ஏப்ரல் 27-ல் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன்னும் சந்தித்தது சர்வதேச அரசியலில் மிக முக்கியமான நகர்வு. இனிமேல் போர் அபாயம் இல்லை என அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைச் சமாதான உடன்படிக்கையாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் சீனாவின் உதவியுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரிய யுத்தத்தை முறைப்படி நிறுத்த முடிவெடுத்திருக்கிறார்கள்.

கொரிய நாடுகளுக்கிடையேயான 2007-ம் ஆண்டு கூட்டறிக்கையும் கிட்டத்தட்ட இப்போது நடந்த சந்திப்பின் சாராம்சத்தையே கொண்டிருந்தது, அணு ஆயுதப் பிரச்சினை உட்பட. எனினும், வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்தது. 2011-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், கிம் தனது நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தைத் துரிதப்படுத்தினார். ஆனால், வட கொரியாவின் அணு ஆயுத மேலாண்மையை அதிகரிப்பது கிம்மின் முதன்மையான நோக்கமாக இல்லை என்பதும், ஒரு நிரந்தமான விரோதச் சூழலில் வாழ விரும்பவில்லை என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

முதலில், அணு ஆயுதமற்ற புதிய யுகத்துக்கான தனது பிரகடனத்தைத் தென் கொரிய அதிகாரிகளைச் சந்தித்து கிம் தெரிவித்திருக்கிறார். பிறகு, இதுகுறித்து மூனைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து, தனது திட்டம் குறித்து விவாதித்திருக்கிறார். அணு ஆயுதச் சோதனையை நிறுத்திவைக்கும்படியும் அறிவித்திருக்கிறார். மேலும், வட கொரியாவின் முதன்மை சோதனைத் தளம் விரைவில் மூடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். தனது தீவிரத்தை உணர்த்துவதை நோக்கமாகக்கொண்டே இவையெல்லாம் நடந்திருக்கின்றன.

டிரம்ப் இந்தச் சந்திப்பை வரவேற்றிருக்கிறார். மேலும், நான்கு வாரத்துக்குள் கிம்மைச் சந்திக்க விரும்புதாகவும் தெரிவித்திருக்கிறார். வாக்குறுதிகள் தந்திருந்தாலும் அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து நம்பகமான உத்தரவாதம் கிடைக்கும் வரை அணு ஆயுதங்களை கிம் கைவிடப்போவதில்லை. தவிரவும், தென் கொரியாவுக்கு அமெரிக்கா தரும் அணு ஆயுத ஆதரவைத் திரும்பப்பெறச் சொல்லியும் அவர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. ஆனால், கிம்மும் டிரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்து அணு ஆயுதமற்ற கொரியாவை உருவாக்குவது குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி, சமாதான விரும்பிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அமைதியை நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் நம் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x