Published : 08 May 2018 09:20 AM
Last Updated : 08 May 2018 09:20 AM

ஜிஎஸ்டியை மேலும் சிக்கலாக்குவதா?

ஜி

எஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது என்ற தகவல்கள் வந்ததும், இந்த வரி வசூல் நடைமுறையை அரசு மேலும் எளிமைப்படுத்தும் என்றே தொழில் துறை வட்டாரங்கள் எதிர்பார்த்தன. இதை ஒட்டியே மாதந்தோறும் ஒரேயொரு படிவத்தைப் பூர்த்திசெய்தால்போதும் என்ற முடிவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வந்தது. இந்தச் சூழலில், சர்க்கரை மீது புதிய ‘செஸ்’ (மேல் வரி) விதிக்க வேண்டும் என்ற யோசனையை ஜிஎஸ்டி பேரவையின் துணைக் குழு முன்வைத்திருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் ‘ஜிஎஸ்டி நெட்வொர்க்’ (ஜிஎஸ்டிஎன்) அமைப்பின் சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இனி மாதம் ஒரு படிவம், விற்றுமுதல் தேதிகளைக் குறிப்பிட்டு நிரப்பித் தந்தால் போதும் என்பதுடன் உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சர்க்கரை மீது புதிய செஸ் விதிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது. சர்க்கரை மீது இப்போது 5% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது போதாதென்று ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.3 கூடுதல் வரி விதித்தால் என்ன என்று பரிசீலிக்கப்படுகிறது. சர்க்கரைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் போக்குவதற்காகவே இந்நடவடிக்கை என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், இது உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளின் நிலுவை யைக் கழிப்பதற்காக, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படவுள்ளது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இரு பெரிய மாநிலங்களில் யாருடைய நிர்வாகத் தவறுகளாலோ ஏற்பட்ட சுமைக்கு நாடு முழுக்க உள்ள நுகர்வோர் மீது கூடுதல் சுமையைத் திணிப்பது நியாயமே அல்ல.

ஜிஎஸ்டி என்பதே எளிமையான வரி, குறைந்த வரி என்ற கோட்பாட்டுக்கு உட்பட்டது. இனி எந்த மேல் வரியும், கூடுதல் வரியும், நுழைவு வரியும் கூடாது என்று ஒப்புக்கொண்டு தான் ஜிஎஸ்டி தொடர்பாகக் கருத்தொற்றுமை ஏற்பட்டது. செஸ் எனப்படும் கூடுதல் வரி வருவாய் மத்திய அரசுக்கு மட்டும் கிடைக்கும். இது எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து தரப்பட மாட்டாது. எனவே, இந்த சர்க்கரை செஸ் முடிவை அரசு ஆரம்பத்திலேயே கைவிட வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பாக, தொடக்க நோக்கங்களுக்கு முரணான எல்லா முடிவு களையும் அரசு கைவிட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x