Published : 14 May 2018 08:43 AM
Last Updated : 14 May 2018 08:43 AM

நுழைவுத் தேர்வு அநீதிகளுக்கு முடிவு கட்டுங்கள்!

ல்வித் துறையை டெல்லியின் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்குள் கொண்டுவருவது எப்படியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) குளறுபடிகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்த முறை நுழைவுத் தேர்வுக்கான மையங்களை ஒதுக்குவதிலேயே பெரிய குழப்படி நடந்தது. மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு கேரளம், ராஜஸ்தான், சிக்கிம் என்று வெவ்வேறு மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டதால் அலைக்கழிக்கப்பட்டனர். அடுத்து, தமிழ்க் கேள்வித்தாளில் மொழிபெயர்ப்பில் கிட்டத்தட்ட 68 இடங்களில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தமுள்ள 180 கேள்வி களில், 49 கேள்விகளில் இத்தகைய தவறுகள் நேரிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. ஆங்கிலம் / இந்தி தெரியாத, தாய்மொழியில் நல்ல ஆளுமை கொண்ட மாணவர்களின் திறனை நாம் இழந்துவிடக் கூடாது என்பதாலேயே மாநில மொழிகளில் தேர்வு எழுதவைக்கும் முறையை நாம் கையாளுகிறோம். அரை மதிப்பெண்கூட திருப்புமுனையை உண்டாக்க வாய்ப்புள்ள, சில ஆயிரம் இடங்களுக்காகப் பல லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இத்தகைய தேர்வுகளில் மாநில மொழிக் கேள்வித்தாளில் நடந்திருக்கும் இத்தகைய தவறுகள் தேர்வை நடத்தும் ‘சிபிஎஸ்இ’ அமைப்பின் அலட்சியத்தின் வெளிப்பாடு மட்டும் அல்லாது, தகுதியான மாணவர்களை வெளியேற்றிவிடவும் கூடியது.

அடுத்து, வேறொரு செய்தி டெல்லி வட்டாரத்தில் அடிபடு கிறது. பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதிகமாக மாணவர் கள் பங்கேற்கும் மொழிகள் நீங்கலாக ஏனைய மாநில மொழிகளை நீக்கிவிடலாம் என்பதே அது. ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 11 மொழிகளில் 13 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ள நிலையில், இவர்களில் 8% பேர்தான் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் என்று சுகாதாரத் துறை இயக்குநரக அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். இந்தியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் அதிகாரிகள், சில மொழிகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என்கிறார்கள். உதாரணமாக, கன்னட மொழியில் 818 பேரே தேர்வு எழுதியிருப்பதாகச் சொல்லி, இந்த வாதம் பேசப்படுகிறது. மிக ஆபத்தான யோசனை இது. படிப்படியாக ஆங்கிலம், இந்தி வழியில் மட்டுமே உயர் கல்வித் தேர்வுகள் என்ற இடத்துக்கும் உயர்கல்வியில் மறைமுகமாக இந்தி ஆதிக்கத்துக்கும் வழிவகுத்துவிடக் கூடியது. சமூகத்தில் கீழ்நிலையிலிருந்து வரும் மாணவர்களை மேலும் இது கீழே தள்ளிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x