Published : 05 Apr 2018 09:51 AM
Last Updated : 05 Apr 2018 09:51 AM
கா
விரி நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி ஆறு வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் அதே பிரச்சினை உச்ச நீதிமன்றத்திடம் சென்றிருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசின் மெத்தனப் போக்குதான். உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ல் தீர்ப்பு வழங்கியும் அதை அமல்படுத்தாமல் நீதிமன்றத்தை மத்திய அரசு அவமதித்துவிட்டது என்று தமிழக அரசு வழக்கு தொடுத்திருக்கிறது. இந்நிலையில், மேலும் மூன்று மாதங்கள் அவகாசமும் கேட்டிருக்கிறது மத்திய அரசு. கர்நாடகத்தில் மே 12-ல் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், இப்பிரச்சினையைக் கையிலெடுக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், கூடுதல் அவகாசம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில், இத்தீர்ப்பு தொடர்பாக சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டிய எதையுமே மத்திய அரசு செய்யவில்லை. தீர்ப்பு வெளியாகி இத்தனை நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ள ‘ஸ்கீம்’ என்பது 2007-ல் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்ட மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று அமைப்பு பற்றியதா அல்லது வேறு ஏதாவதா என்று விளக்கம் வேறு கேட்கிறது மத்திய அரசு.
காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் கூறியது, உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பில் தெரிவித்தது ஆகியவை தொடர்பாக கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வெவ்வேறான புரிதல்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ‘நடுவர் மன்றம் குறிப்பிட்டது காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு பற்றித்தான் என்பதால் அவற்றை ஏற்படுத்துவதைத்தான் உச்ச நீதிமன்றம் தனது ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையிலும் தெரிவித்தது’ என்பது தமிழகத்தின் கருத்து. ‘உச்ச நீதிமன்றம் வாரியம் குறித்து எதையுமே சொல்லவில்லை, மத்திய அரசு புதிதாகப் பிரச்சினையைத் தீர்க்கும் அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாகத்தான் ‘ஸ்கீம்’ என்றது’ என்பது கர்நாடகத்தின் வாதம். தமிழகத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், தங்களுடைய தீர்ப்பில் ‘ஸ்கீம்’ என்று கூறியது மேலாண்மை வாரியத்தைப் பற்றியல்ல என்று விளக்கம் தந்திருக்கிறார். அதேசமயம் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு கிடைக்காமல் போய்விடாது என்று உறுதிமொழியும் அளித்திருக்கிறார்.
இந்த ஆறு வார காலத்தில் நிபுணர்களுடன் ஆலோசனை கலந்துவிட்டு நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தித் தண்ணீர் பகிர்வுக்கு ஒரு ஏற்பாட்டைச் செய்து முடித்திருக்கலாம். நேர்மையாகவும் நடுநிலையாகவும் தண்ணீர் எல்லா மாநிலங்களுக்கும் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படுவது முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட மத்திய அரசு துணை போகக் கூடாது. மாறாக அது அமலாவதற்குத் துணை நிற்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT