Published : 25 Apr 2018 10:11 AM
Last Updated : 25 Apr 2018 10:11 AM
பி
ரிட்டன் தலைநகர் லண்டனில் காமன்வெல்த் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட காமன்வெல்த் உச்சி மாநாடு புத்துணர்வூட்டப்பட்ட மாநாடாக நடந்துமுடிந்திருக்கிறது. எனினும், காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு அத்தனை திருப்தி தரும் மாநாடாக இது அமையவில்லை. பிரிட்டிஷ் காலனி நாடுகள் பெரும்பான்மையாக உள்ள காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, அந்த அமைப்பைத் தொடங்கிய பிரிட்டனில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை நடந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிரடியாக வெளியேறும் தருணத்தில் இந்த மாநாடு நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவுக்குப் பிரதான முக்கியத்துவம் தரப்படும் வகையில் நடந்திருக்கும் மாநாடு இது. மாநாட்டுக்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க இளவரசர் சார்லஸ் நேரில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். இந்தச் சூழலில், காமன்வெல்த் அமைப்பில் இந்தியா பிரதானப் பங்கேற்கும் என்றும், வருங்காலத் திட்டங்களுக்குத் துணை நிற்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதவி ஜனநாயக முறையில் பிற நாடுகளின் தலைவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை. பருவநிலை மாறுதல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து கடல்களைக் காக்கும் நடவடிக்கை, வர்த்தகம், முதலீடு தொடர்பான காமன்வெல்த் இணைப்புத் திட்டம் தொடர்பான ஆக்கபூர்வமான அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனினும், இந்த இலக்குகளை அடைவதற்கான தெளிவான திட்டங்கள் இல்லை.
கரீபியன் தீவுகளிலிருந்து பிரிட்டனுக்கு அழைத்துவரப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களை வெளியேற்றப்போவதாக பிரிட்டன் உள் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது தொடர்பாக, இம்மாநாட்டில் பிரதமர் தெரஸா மே மன்னிப்பு கோரினார். எனினும், பிரிட்டனின் குடியேற்றக் கொள்கை தொடர்பாக எழுந்திருக்கும் அதிருப்தி மாநாட்டில் வெளிப்பட்டது. சட்டவிரோதக் குடியேறிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்த விஷயத்தில் பிரிட்டன் கறார்த்தன்மையுடன் நடந்துகொண்டதால் அந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு காமன்வெல்த் நாடுகளுடனான வணிகத்தில் தாராளம் காட்டும் பிரிட்டன், சேவை விஷயத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. வளர்ச்சி, ஜனநாயக விழுமியங்கள், கல்வி வாய்ப்புகள் என்று பல்வேறு விஷயங்களுக்கான களமாக காமன்வெல்த் இருக்கும் என்பது உண்மை என்றாலும், அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சரிசமமாக நடத்துவதிலும், அனைவரையும் அரவணைத்துச் செயல்படுவதிலும் காமன்வெல்த் தலைமை ஆர்வம் காட்டாவிட்டால் இவை நிறைவேறுவது சாத்தியமில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT