Published : 30 Apr 2018 09:20 AM
Last Updated : 30 Apr 2018 09:20 AM

நீதியின் மாண்பை நிலைநிறுத்திய ஆசாராம் வழக்குத் தீர்ப்பு!

சி

றுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி, ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நீதித் துறையின் மாண்பை நிலைநிறுத்தியுள்ளது. தாங்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்றால் குற்றம்செய்துவிட்டுத் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று நினைப்பவர்களுக்குச் சவுக்கடியாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, நீதித் துறை மீது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

தன்னுடைய பக்தர் ஒருவரின் 16 வயது மகளுக்குக் கெட்ட ஆவி பிடித்திருக்கிறது என்று கூறி, ஜோத்பூர் அருகில் உள்ள தனது சொந்த ஊரான மணாய்க்கு அச்சிறுமியை வரவழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தார் ஆசாராம். இதுதொடர்பாக டெல்லி காவல் துறையில் புகார்செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை விசாரித்த காவல் துறை அதிகாரி களும், பிறகு வழக்கை விசாரித்த நீதித் துறை அதிகாரிகளும் பல்வேறு அச்சுறுத்தல்களை, மிரட்டல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சாட்சிகள் மிரட்டப்பட்டனர். இறுதியில், ‘நல்லவர் - ஆன்மிக வழிகாட்டி என்று தன் மீது நம்பிக்கை வைத்தவர் களையே ஏமாற்றிய ஆசாராமுக்குக் கடும் தண்டனை அவசியம்’ என்று கூறி, அவருடைய வாழ்நாள் முடியும்வரையில் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார் ஜோத்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மதுசூதன் சர்மா.

ஆன்மிகத் தலைவர்கள் வழக்கு என்றாலே காவல் துறைக்கு வேலை அதிகரித்துவிடுகிறது. பஞ்சாப் - ஹரியாணா மாநிலங்களில் மக்களிடையே செல்வாக்கு பெற்ற பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு தண்டனை என்று அறிவிக்கப்பட்டதும் பஞ்ச்குலா பகுதியே போர்க்களமானது. ஆசாராம் வழக்கில், இதைத் தவிர்க்க சிறையிலேயே தற்காலிக நீதி விசாரணைக் கூடம் ஒன்றை அதிகாரிகள் திறந்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய பெற்றோரும் இந்த வழக்கில் கடைசிவரை உறுதியாக இருந்தது பாராட்டத்தக்கது. சாமியார்கள் என்ற போர்வையில் அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கும் நயவஞ்சகர்களை மக்கள்தான் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள், வேலைக்கும் வெளியூர்களுக்கும் தனியாகச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்கள் ஆகியோர் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துவரும் இவ்வேளையில், இந்தத் தண்டனை ஓரளவுக்கு நிம்மதியைத் தருகிறது. படகுக் கார், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பங்களா, தனி விமானம் என்று கோடியில் மிதக்கும் சாமியார்களிடம் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆசாராம் போன்றவர்களின் சாம்ராஜ்யங்கள் வளர நாம்தான் காரணமாக இருப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x