Published : 11 Apr 2018 09:35 AM
Last Updated : 11 Apr 2018 09:35 AM
கா
ல் நூற்றாண்டு இழுத்தடிப்புக்குப் பின் காவிரி நதீநீர்ப் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மத்திய அரசால் அணுகப்படும் விதம் கூட்டாட்சி முறையையே கேலிக்குரியதாக மாற்றியிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் இந்த தேசம் முழுமைக்குமான பிரதிநிதிகள் என்பதை மறந்து தங்களை ஒரு கட்சிக்காரர்களாக மட்டும் சுருக்கிக்கொள்ளும் சிறுமையே இதற்கான காரணம். தமிழ்நாடு முழுவதும் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் நியாயமானவை என்பதோடு, இன்றைய காலகட்டத்தில் பொதுச் சமூகம் தொடர்ந்து புறக்கணித்துவரும் விவசாயிகளின் பிரச்சினைகள் மைய விவாதத்துக்கு வரவும் இது வழிவகுக்கும் என்று கருதலாம்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிகொடுக்கப்பட்டுவரும் சூழலில் ஆளும் அரசுக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில், இன்று கடுமையான அதிருப்தி உண்டாகியிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதுநாள் வரை பெரும்பாலான பிரச்சினைகளை அடையாள நிமித்தமாகவே அணுகின. எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் மக்களிடம் சென்றிருந்தால், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் தந்த விளைவைப் போல குறிப்பிடத்தக்க பலன்கள் மாநிலத்துக்குக் கிடைத்திருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. நல்ல வேளையாக, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவசாயிகளின் குரலுக்கு அந்தக் கதி ஏற்படவில்லை. தமிழகத்தின் குரலும் உணர்வும் இன்று ஒருமித்து ஒலிக்கின்றன.
அரசியல் தளத்தில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பில் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகின்றன. அரசியல் கட்சிகள் மக்களிடம் செல்ல வேண்டும். மக்கள் மத்தியில் தலைவர்கள் நிற்க வேண்டும். இது நடந்தாலே ஆட்சி மன்றத்தில் மக்களுடைய குரல் எதிரொலிக்கத் தொடங்கிவிடும். களத்தில் திமுகவோடு முன்னணி எதிர்க்கட்சிகள் பலவும் கைகோர்த்திருப்பதும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் மக்கள் மத்தியில் கிடைத்துவரும் எழுச்சிகரமான ஆதரவும் ஸ்டாலினின் இந்தப் போராட்டப் பயணம் நல்ல தொடக்கம் என்பதையே சொல்கின்றன. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியின் பணிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத பணி எதிர்க்கட்சிகளுடையது. எதிர்க்கட்சித் தலைவரின் சரியான பயணம் தொடரட்டும். தமிழக விவசாயிகளின் தமிழக விவசாயிகளின் குரல் டெல்லியில் எதிரொலிக்கட்டும்!குரல் டெல்லியில் எதிரொலிக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT