Published : 15 Feb 2018 08:50 AM
Last Updated : 15 Feb 2018 08:50 AM

நிலக்கரி பற்றாக்குறை: குளறுபடிகளுக்கு தீர்வு எப்போது?

நா

ட்டின் மின்சாரத் தேவையில் 66% நிலக்கரி மூலம்தான் பூர்த்தி செய்யப்படும் நிலையில், ஏற்பட்டிருக்கும் நிலக்கரி பற்றாக்குறை, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம் உண்டாகிறது.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2016 நவம்பரில் “ அடுத்த ஆண்டிலிருந்து, நாட்டில் நிலக்கரிப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமிருக்காது" என்றார். ஆரம்பத்தில், அவர் கூறியதைப் போலத்தான் நடந்தது. இந்தியாவின் நிலக்கரித் தேவைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றும் 'கோல் இந்தியா லிமிடெட்' (சிஐஎல்) என்ற அரசுத்துறை நிறுவனமும் தன்னுடைய உற்பத்தித் திறனைப் பெரிதும் கூட்டியது. அனல் மின் நிலையங்களுக்கும் சிமென்ட் - உருக்கு ஆகிய துறைகளுக்கும் நிலக்கரி கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டு தடையின்றி கிடைக்கத் தொடங்கியது. ஆனால், இந்த மாற்றம் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்தது.

மத்திய மின்சார ஆணையம் தரும் தரவுகளின்படி தற்போது 6 அனல் மின் நிலையங்களில் ஏழு நாள்களுக்குப் போதுமான அளவுக்கும், 14 அனல் மின் நிலையங்களில் அதற்கும் குறைவாகவும் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இப்படி நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதற்கு ஒன்றல்ல, பல காரணங்கள் இருக்கின்றன.

நிலக்கரியைச் சுரங்கங்களிலிருந்து அனல் மின் நிலையங்களுக்கும் பிற ஆலைகளுக்கும் கொண்டுசெல்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சுரங்கங்களிலிருந்து ரயில் பாதை இணைப்புகள் போதுமானதாக இல்லை. நிலக்கரியைக் கொண்டுசெல்ல சரக்கு ரயில் பெட்டிகளும் போதிய எண்ணிக்கையில் இல்லை. பல மாநிலங்களில் மின் வாரியங்களின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அதிக நிலக்கரியை வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது குறைந்தபட்சத் தேவைக்கு வாங்கியதால் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி செய்த நிலக்கரி, சுரங்க வாயிலிலேயே தேங்கத் தொடங்கியதால் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டது; ஆனால் தேவை அதிகரித்தபோது திடீரென உற்பத்தியை அதிகப்படுத்த முடியவில்லை.

2016-17-ல் அனல் மின் நிலையங்கள் தங்களுடைய முழுக் கொள்ளளவில் 60% அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைத் தயாரித்தன. அப்போது அவற்றிடம் 680 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் இருந்தது. இப்போது தேவை அதிகரித்துள்ள நிலையில் நிலக்கரி நிறுவனத்தாலும் அதிகம் வெட்டியெடுத்து உடனே அனுப்ப முடியவில்லை, அனல் மின் நிலையங்களாலும் கையிருப்பில் போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள முடியவில்லை. மின்சாரத்தின் கொள்முதல் விலை இதனால் ஒரு யூனிட்டுக்கு ரூ.9 என்று அதிகரித்திருக்கிறது.

மின்சாரத் துறையில் ஏற்படும் எந்தப் பாதிப்பும் நாட்டின் ஒட்டுமொத்த ஓட்டத்தையும் பிடித்து இழுக்கக்கூடியது. இந்தப் பிரச்சினையிலிருந்து மீள உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் நிரந்தரத் தீர்வுக்கான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x