Published : 09 Feb 2018 08:58 AM
Last Updated : 09 Feb 2018 08:58 AM
இ
னி வரும் மாதங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளால் விலைவாசி உயரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. இதனால் வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி தரும் பணத்துக்கான ‘ரெபோ’ வட்டி வீதத்தை மாற்றாமல் அதே 6% ஆகத் தொடர முடிவுசெய்திருக்கிறது. அடுத்துவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இதைக் கூட்டவோ, குறைக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்ற திறந்த மனதுடன் அணுகவும் முடிவுசெய்திருக்கிறது.
கடந்த நவம்பரில், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. பிறகு, குளிர்காலத்தின் பின்பகுதியில் சற்றே தணிந்தது. நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பணவீக்க விகிதம் 4.6% ஆனது. அடுத்த ஆறு மாதங்களுக்கு அதாவது மார்ச் 2018 வரையில் பணவீக்க விகிதம் 4.3% முதல் 4.7% வரை உயரலாம் என்று ரிசர்வ் வங்கி முதலில் மதிப்பிட்டது. ஆனால், ஜனவரியில் பெட்ரோல் - டீசல் விலை சர்வதேசச் சந்தையில் சட்டென்று உயர்ந்தது. இதையடுத்து, சில்லறை விலையில் பணவீக்க விகிதம் 5.1% வரை உயரும் என்று ரிசர்வ் வங்கி தனது மதிப்பீட்டைத் திருத்தியது. நடப்பு நிதியாண்டுக்கு அப்பாலும் பணவீக்க விகிதம் அதிகமாகும் என்பது தெரிகிறது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பல்வேறு மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்குத் தர வேண்டிய வீட்டு வாடகைப்படி நிலுவையை இன்னும் தரவில்லை. அப்படித் தரும்பட்சத்தில் விலைவாசி மேலும் உயரக்கூடும். உலக அளவில் பொருளாதாரம் வளர்ந்துவருகிறது. பொருளாதாரம் வளர்ந்தால் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கும் பிற பொருட்களுக்கும் தேவையும் அதன் காரணமாக விலை உயர்வும் ஏற்படும். இந்தியாவில் விளையும் எல்லா உணவு தானியங்களுக்கும் இனி மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தரும் என்ற பட்ஜெட் அறிவிப்பும், எதிர் காலத்தில் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது. அரசின் செலவுகளுக்கேற்ப வரவை உயர்த்த முடியாவிட்டால், கடன் வாங்கித்தான் பற்றாக் குறையை ஈடுகட்ட வேண்டும். அந்த வட்டிச் செலவும் விலைவாசியை அதிகரிக்கச் செய்யும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, வளர்ந்த நாடுகளும் தங்களுடைய பணக் கொள்கையைச் சற்றே தாராளமாகக் கையாண்டால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் போடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் கரைந்து, வளர்ந்த நாடு களுக்கே திரும்பும். இதனால் உள்நாட்டில் முதலீடுகளுக்குக் குறைந்த நிதிதான் கிடைக்கும். இது வட்டியை உயர்த்தி விடும். புதிய நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பணவீக்க விகிதம் 5.1% முதல் 5.6% வரையிலும் பிறகு நிதியாண்டின் கடைசி ஆறு மாதங்களில் 4.5% முதல் 4.6% வரையிலும் குறையக்கூடும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க் கிறது. இந்த எதிர்பார்ப்புகூட 2018-ல் பருவமழை வழக்க மான அளவு பெய்யும் என்ற நம்பிக்கையில்தான். இந்நிலையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT