Published : 06 Feb 2018 08:50 AM
Last Updated : 06 Feb 2018 08:50 AM

பட்ஜெட் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவைதான்; அமலாவது சாத்தியமா?

ந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது பாஜக தலைமையிலான கூட்டணி அரசு. கடைசி பட்ஜெட் என்பதாலேயே இதற்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், சாதகமான சில அம்சங்களும், நிறைவேறுவதற்குச் சாத்தியம் உள்ளவையா என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் பல அம்சங்களும் கொண்ட பட்ஜெட்டாக இதை வழங்கியிருக்கிறார் நிதி யமைச்சர் அருண் ஜேட்லி. 2019-ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.24.4 லட்சம் கோடி வருவாய் வரும் என்ற எதிர்பார்ப்பில் ஜேட்லி சில அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். நிதி ஆதாரம் பற்றாக்குறையாக இருப்பதால், பட்ஜெட்டையும் தாண்டிய சில ஆதாரங்களையும் புற முகமைகளையும் நாடியிருக் கிறார். அவர் எதிர்பார்த்தபடி இவை கிடைக்கவில்லை என்றால், அவர் செய்த அறிவிப்புகளுக்கும் அவை அமலா வதற்கும் பெருத்த இடைவெளி ஏற்படுவது நிச்சயம்.

வேளாண்மையைப் பொறுத்தவரை, எல்லாப் பயிர்களுக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அவற்றின் இடுபொருள் செலவைப் போல ஒன்றரை மடங்காகத் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி கோதுமை, அரிசி ஆகியவற்றுக்கான உணவு தானிய மானிய ஒதுக்கீட்டைச் சற்றே அதிகரித்து ரூ.29,041 கோடியாக்கியிருக்கிறார். குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை சரிந்துவிடாமல் இருக்கப் புதிய வழிமுறை கள் உதவும் என்றிருக்கிறார். ஆனால், அந்த வழிமுறைகளை நிதி ஆயோக் அமைப்புதான் உருவாக்கும். கிராமச் சந்தைகளையே விவசாயிகளின் சந்தைகளாக நிரந்தரமாக்கும் முடிவு, வேளாண் விளைபொருள் விலை நிர்ணயக் கமிட்டிகளின் பிடியிலிருந்து சிறு விவசாயிகளை விடுவிக்கும் முயற்சிதான். ஆனால், இதற்கு ரூ.2,000 கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. யானைப் பசிக்கு சோளப்பொறி இது!

கிராமப்புறப் பகுதிகளில் புதிதாக 3 கோடி வீடுகளுக்கு இலவச சமையல் கேஸ் இணைப்பு, 4 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடிக் கழிப்பறைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுண் - பாசனத் திட்டங்களும் மேற்கொள்ளப்படஉள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.14.34 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதில் ரூ.11.98 லட்சம் கோடி பட்ஜெட் மூலம் அல்லாது வேறு இனங்கள் வழியாகத் திரட்டப்பட வேண்டியிருக்கிறது.

சமூகநலத் திட்டங்களும் இதேரீதியில்தான் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள 10 கோடிக் குடும்பங்களுக்கு தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இது மிகவும் அவசியமான திட்டம்தான் என்றாலும், இது எப்படி அமலாகும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. கல்வி மேம்பாடு, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன், பெண் குழந்தைகளின் நல்வாழ்வு போன்றவற்றுக்குத் தேவைப்படும் ரூ.1.38 லட்சம் கோடியில், அரசு பட்ஜெட் மூலமாக ரூ.16,000 கோடிதான் ஒதுக்குகிறது. அடித்தளக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மட்டுமே நிதி பெறுவது எப்படி என்று தெளிவாகத் திட்டமிடப்பட்டிருக் கிறது. அதற்கு 2019-ல் அரசுத் துறை நிறுவனங்கள் மூலம் ரூ.5.97 லட்சம் கோடி தரப்படவிருக்கிறது.

நடுத்தர வகுப்பினர் மற்றும் பெருந்தொழில் நிறுவனங் கள் விஷயத்தில் நிதியமைச்சர் தாராளம் காட்டவில்லை. மிக முக்கியமாக, வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. நிலையான கழிவாக ரூ.40,000-த்தைக் குறைத்துக்கொண்டுவிடலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கான கூடுதல் தீர்வை அதிகரிப்பால் அதுவும் பலன் கொடுக்காது. தொழில் துறை மீதான நிறுவன வரியை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் - ஆண்டு விற்றுமுதல் ரூ.250 கோடி வரையுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானவை சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளாகும். ரூ.250 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ள பெரு நிறுவனங்களால் பிற நாட்டுப் பெரு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் போகும். ஐரோப்பாவில் நிறுவனங்கள் மீதான வரி சராசரியாக 20% ஆகவும் அமெரிக்காவில் 21% ஆகவும் உள்ளன. மூத்த குடிமக்கள் வங்கிகளிலும் தபால் அலுவலகங்களிலும் செலுத்தியுள்ள நிரந்தர வைப்புத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை ரூ.10,000 வரைக்கும் வரி விதிப்புக்கு உள்ளாகாது என்ற சலுகை ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டிருப்பதால், அவர்களுக்கு நிம்மதி ஏற்படும். அதைவிட இவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என்பது அதைவிடப் பெரிய நிவாரணமாகும்.

பங்குகள், பரஸ்பரப் பங்கு முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் 10% நீண்ட கால மூலதன ஆதாய வரி உற்சாகம் இழக்கச் செய்யும். பங்குச் சந்தையில் இதனால் சரிவும் ஏற்பட்டது. சமீப காலத்தில் சிறு முதலீட்டாளர்கள்தான் நிரந்தர வைப்புத் தொகை போன்ற முதலீடுகளிலிருந்து விலகி, பங்குச் சந்தைக்கு மாறத் தொடங்கினர். அவர்களுக்கு இது முகச் சுளிப்பையே ஏற்படுத்தும்.

கடந்த நான்கு ஆண்டுகளாகக் கவனம் செலுத்த மறந்த கிராமப்புறங்கள் மீதும் விவசாயிகள் மீதும் அரசுக்கு அதிக அக்கறை ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்த பட்ஜெட் எந்தத் தரப்புக்கும் மகிழ்ச்சியையோ உற்சாகத்தையோ நம்பிக்கையையோ ஊட்டவில்லை என்பதே உண்மை. அரசின் வருவாய் ஆதாரங்கள் வலு வடைந்து, ஜிஎஸ்டி வசூல் நிலைப்படுத்தப்பட்ட பிறகுதான், எதிர்கால பட்ஜெட்டுகள் சமூகநலத் திட்டங்களில் மேலும் கவனம் செலுத்த முடியும் எனும் நிலை உருவாகியிருப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x