Published : 12 Feb 2018 09:19 AM
Last Updated : 12 Feb 2018 09:19 AM
கா
ப் பஞ்சாயத்துகள் என்றழைக்கப்படும் சாதிப் பஞ்சாயத்து கள் தங்களைச் சமூகத்தின் மனசாட்சியாகக் கருதிக்கொண்டு, சாதி ஆணவக் கொலைகளுக்குத் துணை போக வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். சாதி ஆணவத்துடன் கொலைகளைச் செய்துவிட்டு அவற்றை ‘கெளரவக் கொலைகள்’ என்று தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்ளும் அவலத்தையும் நீதிமன்றம் கடுமையாகச் சாடியிருக்கிறது. சாதி மறுப்பு மற்றும் மதம் கடந்த திருமணங்களில் தலையிடும் உரிமை சாதிப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கோ, குடும்பத்தவர்களுக்கோ இல்லை என்று உச்ச நீதிமன்றம் அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தொடர்வது வெட்ககரமானது.
காதல் திருமணங்களைத் தடைசெய்யும் அல்லது செல்லாததாக்கும் சாதிப் பஞ்சாயத்து அமைப்புகளை, ‘கங்காரு நீதிமன்றங் கள்’ (கட்டைப் பஞ்சாயத்துகள்) என்று 2011-ல் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. தங்களுடைய மேலாதிக்க மனோபாவம் காரண மாகவும் சாதிப் பெருமை காரணமாகவும் காப் பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இளம் உள்ளங்களில் தோன்றும் இயற்கை யான அன்பைக் கண்டிப்பதும், அன்புள்ளங்களைப் பிரிப்பதும், திருமணம் செய்துகொள்ள முடியாமல் தடுப்பதும், ஒரு கட்டத்தில் காதல் ஜோடியில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ குரூரமாகக் கொல்வதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அது குறிப்பிட்டிருக்கிறது.
சாதித் திமிரை நிலைநாட்ட கிராமப் பகுதிகளில்தான் இப்படிக் கொலைசெய்கின்றனர் என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், நகர்ப்புறங்களிலும், அதிலும் முன்னேறிய சமூகங்களைச் சேர்ந்தவர் களாலும்கூட இப்படிப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. வட இந்தியாவில் இருக்கும் சாதிப் பஞ்சாயத்துகள், சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை மட்டுமல்ல, தங்களுடைய சமூகத்துக்குள்ளேயே ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதையும் அனுமதிப்பதில்லை. நம்முடைய அரசும் சட்டங்களும் சாதி, மத மறுப்புத் திருமணங்கள ஆக்கபூர்வமாகவே அணுகுகின்றன. ஆனால், சட்டங்களையெல்லாம் விட தங்களைப் பெரிதாகக் கருதிக்கொள்ளும் அளவுக்கு அராஜகத்துடன் நடந்துகொள்கிறார்கள் சாதிப் பஞ்சாயத்துத் தலைவர்கள்.
சமூகக் கண்ணோட்டங்கள் மாறினால்தான் இந்தத் தடைகள், தயக்கங்கள் விலகும். அடக்குமுறைகள் முடிவுக்குவரும். திருமணங்களில் தலையிட மற்றவர்களுக்கு உரிமையில்லை என்று தடை விதிக்கும் வரைவுச் சட்டத்தை மத்திய சட்ட ஆணையம் 2012-ல் தயாரித்தது. சாதிப் பஞ்சாயத்துகள் என்பவை சட்ட விரோதமான கூடுகை என்றும், அவை எடுக்கும் முடிவுகள் அலைக்கழிப்புக்கு உள்ளாக்குபவை என்றும் அந்த வரைவுச் சட்டத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது. சமூகப் புறக்கணிப்பு, தொடர் மிரட்டல், தாக்கு மாறு மற்றவர்களைத் தூண்டுவது போன்ற குற்றங்களுக்குக் குறைந்தபட்சத் தண்டனை விதிக்க அச்சட்டத்தில் வழிசெய்யப்பட்டிருந்தது. சாதிப் பஞ்சாயத்துகளின் தலையீட்டைச் சட்டம் மூலமோ அல்லது சமூக மாற்றம் மூலமோ விரைவில் தடுத்தே ஆக வேண்டும். அவர்களுடைய குறுக்கீட்டையும் சுயமாக தண்டனை வழங்கும் போக்கையும் எந்தக் காரணம் கொண்டும் இனியும் அனுமதிக்கக் கூடாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT