Published : 25 Jan 2018 10:46 AM
Last Updated : 25 Jan 2018 10:46 AM
வ
ட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். திரிபுராவில் பிப்ரவரி 18-லும் மேகாலயம், நாகாலாந்தில் பிப்ரவரி 27-லும் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 3-ல் மூன்று மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தலா 60 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட சிறிய மாநிலங்கள் இவை. மூன்று மாநிலங்களுமே வளர்ச்சிக்கு மத்திய அரசைத்தான் பெரிதும் நம்பியிருக்கின்றன. எனினும், இவற்றின் அரசியல் முக்கியத்துவம் எந்த விதத்திலும் பெரிய மாநிலங்களைவிடக் குறைந்ததல்ல.
கேரளத்துக்கு அடுத்ததாக திரிபுராவில்தான் மார்க்சிஸ்ட்டுகள் ஆளும் கட்சியாக இருக்கின்றனர். தொடர்ந்து அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பவர் திரிபுராவின் மாணிக் சர்க்கார். சமூகநல அடையாளங்களில் திரிபுரா நல்ல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. மனிதவள வளர்ச்சி அட்டவணையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. மார்க்சிஸ்ட்டுகளின் நல்ல நிர்வாகம் காரணமாக தீவிரவாதக் குழுக்கள் சாந்தப்படுத்தப்பட்டு அமைதி தவழ்கிறது. அதேசமயம், மாநில வளர்ச்சி எல்லா துறைகளிலும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம். எனவே, ஆளும் கட்சிக்கு இவை பெரிய சவாலாகத் திகழும். இந்த முறை காங்கிரஸை மட்டுமல்ல, பாஜகவையும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்கொள்ள வேண்டும். மாநில மக்கள்தொகையில் பழங்குடிகள் 32%. அவர்களைத் தன் பக்கம் இழுக்க பாஜக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. திரிபுராவிலிருந்து பழங்குடி வசிப்பிடங்களைப் பிரித்து ‘திப்ராலாந்து’ தர வேண்டும் என்று கோரும் ‘திவிப்ரா தேசியக் கட்சி’யுடன் பாஜக கூட்டு சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘நாகாலாந்து மக்கள் முன்னணி’ (என்பிஎஃப்) நாகாலாந்தை ஆள்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சிக்குள் மோதல் வெடித்தது. அதில் முதல்வர் பதவியை இழந்த டி.ஆர்.ஜெலியாங் 2017 ஜூலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஜெலியாங்குக்கும் அவருக்கு முன்னதாக முதல்வராக இருந்த ஷுர்ஹோசலி லீசெட்ஸுவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. ஆளும் கூட்டணியின் வாக்குகள் சிதறினால் நமக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்று பாஜக நம்புகிறது. தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று நாகா ஹோஹோ கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.
மேகாலயத்தில் முதலமைச்சர் முகுல் சங்மா தொடர்ந்து எட்டு ஆண்டுகளாகப் பதவிவகிக்கிறார். நிலையான ஆட்சிக்கு எங்களையே தேர்ந்தெடுங்கள் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்யவுள்ளது. பாஜகவுக்கு இங்கு கட்சி அமைப்பே கிடையாது என்றாலும், கான்ராட் கே.சங்மாவின் தேசிய மக்கள் கட்சியை அது நம்பியிருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி இடம்பெற்றிருக்கிறது. ஆனால், மாநிலத் தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் வாக்காளர்களுடைய நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்காது என்றாலும், புதிய இடங்களிலும் கால் ஊன்ற நினைக்கும் பாஜகவின் வியூகங்கள் வெற்றிபெறுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT