Published : 24 Jan 2018 09:17 AM
Last Updated : 24 Jan 2018 09:17 AM
த
மிழக மக்களுக்குப் புத்தாண்டு, பொங்கல் பரிசாகப் பேருந்துக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது தமிழக அரசு. இதன்படி, புறநகர் குறைந்தபட்ச சாதாரண பேருந்துக் கட்டணமே ரூ.5 முதல் ரூ.6-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச விரைவுப் பேருந்துக் கட்டணம் ரூ.17-லிருந்து ரூ 24- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மாநகரப் பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.12-லிருந்து ரூ.19-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. வெளியூர் செல்லும் பேருந்துகளிலும் கணிசமாகக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தனியாரும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 55%-லிருந்து 100% வரை கட்டணம் உயர்ந்திருக்கிறது.
ஜனவரி 19 இரவு 7:32 மணிக்கு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் பயணச் செலவுக்குப் பணம் போதாமல் மிகவும் அவதிப்பட்டனர். பலர் பேருந்துகளிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். வெளியூர் சென்றுவிட்டுத் திரும்ப முடியாமல் பேருந்து நிலையங்களிலேயே காத்திருந்த அவலமும் நேர்ந்துள்ளது.
ஆனால், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடர்ப்பாட்டை, கட்டணச் சுமையைப் பொருட்படுத்தாத அரசு, ஊதிய உயர்வு, பராமரிப்பு - பழுதுபார்ப்புச் செலவு, எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காகக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கம் சொல்கிறது. நிதிப் பற்றாக்குறையால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கட்டண உயர்வைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார்.
மலைப் பகுதிகள், கிராமப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் அதிகக் கூட்டம் இல்லாததால், ரூ. 900 கோடி இழப்பு ஏற்படுவதாகச் சொல்லும் அரசு, தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஏற்க முடியாத காரணங்களைக் கூறுகிறது.
எதிர்காலத்தில் எரிபொருள், பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றில் ஏற்படும் கூடுதல் செலவினக் குறியீடுகளின் அடிப்படையில் அவ்வப்போது கட்டணம் உயர்த்தப்படும் என்றும் சொல்லி அதிர்ச்சியை மேலும் அதிகரித்திருக்கிறது அரசு. சேவைத் துறையாக இயங்கிவரும் பேருந்துப் போக்குவரத்தால், தமிழகத்தின் கிராமப் பகுதிகள் வரை அடைந்திருக்கும் நன்மைகள் அளவிட முடியாதவை. அப்படிப்பட்ட போக்குவரத்துத் துறையை லாப, நஷ்டக் கணக்கு பார்த்து வணிக நோக்கில் பாவிப்பது விமர்சனத்துக்குரியது.
போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்கு அரசே பொறுப்பேற்பதுடன், அவற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். எரிபொருள் விலை உயர்வு, சர்க்கரை விலை உயர்வு என்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்குக் கடும் சுமையை ஏற்படுத்தியிருக்கும் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT