Published : 12 Jan 2018 08:53 AM
Last Updated : 12 Jan 2018 08:53 AM

‘ஆதார்’ தரவுத் திரட்டை அம்பலப்படுத்தியவரை பலிகடா ஆக்குவதா..!

‘ஆ

தார்’ என்றழைக்கப்படும் குடிமக்களின் தேசியத் தகவல் திரட்டு மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது என்று அரசும் ஆதார் அமைப்பும் கூறிவரும் நிலையில், அதன் பாதுகாப்புத்தன்மை பற்றி கவலை தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. சில நூறு ரூபாய் பணம் கொடுத்தால் ஆதார் தரவுகளை யார் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ‘தி டிரிப்யூன்’ பத்திரிகை யின் நிருபர் ரச்னா கைரா. ஆனால், தகவலைக் கசிய விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தாமல், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு ஆதார் தகவல்களைத் தர முன்வருவதை விவரித்துள்ள ரச்னா கைரா, அப்படிப் பெறப்பட்ட பெயர்களையோ எண்களையோ முகவரியையோ வெளியிடவில்லை. அத்துடன் ஆதார் தரவுகளைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டிய ‘யுஐடிஏஐ’ அமைப்பின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இந்தக் கசிவு பற்றி அவர்களுடைய கருத்துகளையும் கேட்டிருக்கிறார். ஆனால், தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தவறிய அதிகாரிகள், ரச்னா கைரா தனது அடையாளத்தைத் தராமல் மறைத்ததை மோசடி என்று குற்றஞ்சாட்டி, அதைச் சார்ந்த சில குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

ஊடகங்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிவதற்காகவே அவருடைய பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருப்பதாக சப்பைக்கட்டு கட்டியிருக்கிறது அரசு. ஆதார் தகவல்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அதன் முக்கியத்துவம் தெரியாமல் பணத்துக்கு விலை போகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தவே அதைத் தந்திருக்கிறார். அவரைப் பாராட்டாமல், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கைவிரல் ரேகை, கண்ணின் கருவிழி அடையாளம் போன்ற பயோ-மெட்ரிக் தரவுகள் கிடைத்தால்தான் ஆதார் தரவுகளைக் களவாட முடியும் என்று ஆதார் அமைப்பு அதிகாரிகள் கூறுவது சரியாகக்கூட இருக்கலாம். ஆனால், தரவுகள் பாதுகாப்பில் குறைகள் உள்ளன என்பதை ஏற்று, அதைச் சரிசெய்ய வேண்டும்.

இந்தத் தரவுகளைத் திரட்டுவது ஆதார் அமைப்பாக இருந்தாலும், தனியார் மொபைல் நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவற்றின் கடமை. எந்த நோக்கத்துக்காகத் தரவுகள் பெறப்பட்டனவோ அதைத் தவிர, வேறு செயல்களுக்கு அதைப் பயன்படுத்தக் கூடாது. டிஜிட்டல் வடிவில் திரட்டப்படும் தரவுகளை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் திருடிப் பயன்படுத்த முடியும். ‘தனியுரிமைத் தகவல்’ எது என்பதற்குச் சரியான சட்ட விளக்கம் நம் நாட்டில் இல்லை. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பது அவர்களுக்கு அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமை. அப்படியிருக்க, அரசின் திட்டங்களுக்காகக் திரட்டப்படும் தரவுகளையும் ரகசியமாகவே வைத்திருக்க அரசும், தனியார் முகமைகளும் முன்னுரிமை தர வேண்டும். பத்திரிகையாளர் ரச்னா கைரா மீதான வழக்கைத் திரும்பப் பெறுவதுடன், முறைகேடுகளுக்குக் காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x