Published : 18 Jan 2018 09:55 AM
Last Updated : 18 Jan 2018 09:55 AM
அ
திக விளைச்சல் காரணமாகக்கூட விவசாயிகள் துயரத்தில் ஆழ்வது சமீப காலத்தில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமானதால் அதன் விலை படுமோசமாகச் சரிந்து, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்கூட மொத்த விலைச் சந்தையில் கிடைக்காத நிலையை உருவாக்கியிருக்கிறது. போக்குவரத்துச் செலவுக்குக்கூடக் கட்டுப்படியாகாததால் விளைந்த உருளைக்கிழங்குகளை நிலத்திலேயே விட்டுவிடும் விரக்தியான மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், விவசாயிகளுக்கு உதவ அரசு முன்வர வேண்டும்.
சில வாரங்களுக்கு முன்னால் தக்காளிக்கும், அதற்கும் முன்னால் வெங்காயத்துக்கும் இந்தக் கதி நேர்ந்தது. கடந்த ஆண்டு மிளகாய் வற்றல் (சிவப்பு மிளகாய்), துவரை, தக்காளி விளைச்சலின்போதும் விவசாயிகள் இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. சந்தையில் எந்தப் பயிர் அதிக விலைக்கு விற்கிறதோ அந்தப் பயிரைச் சாகுபடிசெய்யவே எல்லா மாநில விவசாயிகளும் முற்படுகின்றனர். ஒரே சமயத்தில் அதிகம் விளைவதாலும் பெரும்பாலும் இவற்றை அதிக நாட்களுக்குக் கெடாமல் வைத்திருக்க இயலாததாலும் விலைச் சரிவுக்கு உள்ளாகின்றன. 2016-17-ல் 4.9% ஆக இருந்த விவசாய வளர்ச்சி 2017-18-ல் 2.1% ஆகக் குறையும் என்று அரசின் ஜிடிபி முன்கணிப்பு தெரிவிக்கிறது.
விவசாயிகளின் கடன் நிலுவையைத் தள்ளுபடிசெய்வது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவது அல்லது இவ்விரண்டையும் சேர்த்து மேற்கொள்வது என்று சில மாநில அரசுகள் இறங்கக்கூடும். மத்திய அரசு அடுத்து அளிக்கவுள்ள பட்ஜெட்டில் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம். ஆனால், எந்தத் தற்காலிக நடவடிக்கையும் விவசாயிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. வேளாண் பொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு, பருவத்துக்குப் பருவம் மாறிக்கொண்டே இருப்பதைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு அவசியம். சாகுபடியாளர்களும் நுகர்வோரும் பாதிப்படைந்து, இடைத் தரகர்கள் கொழுக்கும் இப்போதைய நடைமுறை மாற்றப்பட வேண்டும். வேளாண் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதில் அரசு புகுத்தும் பல கட்டுப்பாடுகளும் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே சந்தை என்று அறிவிப்பதுடன் நில்லாமல், இணைய வழியாகவும் நிர்வாக ஆணைகள் மூலமாகவும் அவற்றை இணைக்க வேண்டும்.
வேளாண் விளைபொருட்களை விதைப்புக் காலத்திலேயே நல்ல விலை நிர்ணயித்துக் கொள்முதல் செய்துகொள்வதற்கான ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வர வேண்டும். அத்துடன், சந்தையில் ஒரு சில வியாபாரிகள் சேர்ந்துகொண்டு, விளைச்சல் அதிகமாகிவிட்டால் விலையைக் குறைத்து வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுடைய செல்வாக்கு நீக்கப்பட வேண்டும். விவசாய விற்பனைக் கட்டமைப்பையே திருத்தியமைக்க அரசு முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விலை மட்டுமல்ல, நிலையான விலையும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். வேளாண் துறையின் இந்தத் துயரம் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய பிரச்சினை. அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT