Published : 08 Jan 2018 11:49 AM
Last Updated : 08 Jan 2018 11:49 AM
தலைநகர் சென்னையில் பெரும் இலக்கிய மழையொன்று பெய்து முடித்திருக்கிறது. ‘தி இந்து’ குழுமத்தின் சார்பில் 2011-லிருந்து ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழா முதன்முறையாகத் தமிழிலும் இந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்கிறது. ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கில நிகழ்வுக்கு முன்னதாக 07-01-2018 அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் போன்றோரின் பங்கேற்பு மட்டுமல்லாமல் வாசகர்களின் பங்கேற்பாலும் இந்த விழா பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த விழாவில் வழங்கப்பட்ட ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விருதுகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பது தமிழ் இலக்கியச் சூழலில் மிகுந்த ஊக்கம் அளிக்கும் செய்தி!
‘லிட் ஃபார் லைஃப்’ தமிழ் நிகழ்வின் முதல் பதிப்புக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் இந்த முதல் நிகழ்வு அமைந்திருந்தது. இந்த நிகழ்வை சிறுகதைச் சாதனையாளரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமி காலையில் தொடங்கிவைக்க மாலையில் விருதாளர்களுக்கு விருதளித்துச் சிறப்பித்தார் இந்திரா பார்த்தசாரதி. இடைப்பட்ட அமர்வுகளில் தமிழ் இலக்கியம், திரைத்துறை ஆகியவற்றைச் சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பற்றி உரையாற்றியது மட்டுமல்லாமல் வாசகர்களுடன் உரையாடியதும் இந்த நிகழ்வை உயிர்ப்புமிக்கதாக மாற்றியது. இதுபோன்ற உரையாடல்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும். வாசகர்களின் அன்புக்குரிய எழுத்தாளர்கள் பெரும்பாலானோரும் ஒரே இடத்தில் காணக்கிடைத்தது எழுத்தாளர்-வாசகர் உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
தமிழில் இலக்கியச் செயல்பாடுகள் என்பவை தனிமனிதர்களின் தியாகத்திலும் பிரதிபலன் எதிர்பாராத உழைப்பிலும்தான் தழைத்தோங்குகின்றன. அந்த வகையில் ‘தி இந்து’ போன்ற வெகுசன இதழ்கள் இலக்கிய நிகழ்வுகளை நடத்தி எழுத்தாளர்களை கௌரவிப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். அந்தக் கடமையின் அடையாளங்கள்தான் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய நிகழ்வும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட விருதுகளும்.
மேலைநாடுகளில் எழுத்தையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்கிய, இயங்கும் எழுத்தாளர்கள் கணக்கற்றோரைக் குறிப்பிட முடியும். ஒருவர் எழுத்துத் துறையில் முழுமுனைப்புடன் ஈடுபட விரும்பினால் அதற்கான சூழல் அங்கே நிலவுகிறது. தமிழிலோ எழுத்தின் மீது பெரும் காதல் கொண்டிருந்தாலும் வாழ்க்கைப் பாட்டுக்காக வேறு வேலைகள் பார்த்துக்கொண்டு கிடைத்த நேரத்தில் எழுத வேண்டிய இக்கட்டான சூழல்தான் காணப்படுகிறது. இந்த இடத்தில்தான் விருதுகள் முக்கியமான பங்குகள் வகிக்கின்றன. விருதுகளுடன் வழங்கப்படும் தொகை ஒரு படைப்பாளிக்கு பொருளாதாரரீதியில் உதவியாக அமைவதுடன் அந்த அங்கீகாரம் அவருக்குச் சமூகத்தில் மதிப்பைக் கூட்டும் வகையில் இருப்பதும் முக்கியமானது. பல்வேறு பெரும் இதழ்கள், ஊடகங்கள், பெருநிறுவனங்கள் போன்றவை தங்களின் சமூகக் கடமைகளுள் ஒன்றாக எழுத்தாளர்களைக் கௌரவிப்பது என்பதைக் கொண்டால் நம் எழுத்தாளர்களின் பொருளாதாரச் சுமை குறிப்பிட்ட அளவுக்குக் குறைந்து தங்கள் படைப்பு வானில் சுதந்திரமாகப் பறப்பதற்கான சூழல் அவர்களுக்கு ஏற்படும். இந்தப் பின்னணியில்தான் ‘தி இந்து லிஃப் ஃபார் லைஃப்’ தமிழ் விருதுகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
எந்த பாரபட்சமும் இல்லாத வகையில் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் விருதுகள் அமைய வேண்டும் என்று ‘தி இந்து’ ஆசிரியர் குழு கடந்த சில மாதங்கள் விருதுத் தேர்வில் தீவிர உழைப்பைச் செலுத்தியிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது அறிவிக்கப்பட்ட இந்திரா பார்த்தசாரதி, சமகால இலக்கியச் சாதனையாளருக்கான ‘ஜெயகாந்தன் விருது’ வழங்கப்பட்ட இமையம், பெண் படைப்புக் குரலுக்கான ‘பாரதி விருது’ வழங்கப்பட்ட தமயந்தி, விளிம்பின் உரத்த முழக்கத்துக்கான ‘இன்குலாப் விருது’ வழங்கப்பட்ட கீரனூர் ஜாகிர்ராஜா, இளம் எழுத்தாளருக்கான ‘பிரமிள் விருது’ வழங்கப்பட்ட சயந்தன், அபுனைவுக்கான ‘ஏ.கே. செட்டியார் விருது’ வழங்கப்பட்ட ராமாநுஜம் ஆகிய அனைவரும் தத்தமது இலக்கியப் பாதைகளில் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தியவர்கள். இவர்களைப் போன்ற முக்கியமான ஆளுமைகளுக்கு உரிய கௌரவத்தை அளிப்பதை ‘தி இந்து’ தனது தலையாய கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருக்கிறது.
‘தமிழால் இணைவோம்’ என்ற வாசகம் எவ்வளவு சக்தி மிக்கது என்பதை உணரச் செய்த வாசகர்களுக்கு ‘தி இந்து’ இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. நம் சமூகத்துக்கும் மொழிக்கும் வளம்சேர்க்கும் இது போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை ‘தி இந்து’ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT