Published : 31 Jan 2018 09:08 AM
Last Updated : 31 Jan 2018 09:08 AM
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாகக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதே எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 70 டாலராகக் கடந்த வெள்ளிக்கிழமை உயர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச விலை. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 6% அளவுக்கு விலை ஏறியிருக்கிறது. கடந்த ஜூனில் ஒரு பீப்பாய் 45 டாலருக்கு விற்றது. சில மாதங்களுக்குள்ளாகவே 55% விலை அதிகரித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரிய நாடுகளின் கண்ணோட்டம்தான் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். அமெரிக்காவின் எண்ணெய் தயாரிப்பாளர்கள் உருவாக்கிய போட்டியால் பிற எண்ணெய் உற்பத்தி நாடுகள் விலையைக் கடுமையாகக் குறைத்து விற்க நேரிட்டது. இப்போது பீப்பாய் 70 டாலராகிவிட்டதால் சவுதி அரேபியாவே இழப்பிலிருந்து மீண்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு, அமெரிக்க டாலரின் செலாவணி மாற்று மதிப்பு குறைந்ததும் ஒரு காரணம். கடந்த ஆண்டிலிருந்தே டாலரின் மதிப்பு குறைந்தது. ஆனால் அமெரிக்காவின் நிதியமைச்சர் ஸ்டீவன் நுச்சின், டாலரின் மதிப்பு குறைந்தால்தான் அமெரிக்காவால் அதிகம் ஏற்றுமதிசெய்ய முடியும் என்று கூறியிருப்பதும் ஒரு காரணம். ஆனால் டாலரின் மதிப்பு இப்படியே குறையும் என்றும் கூறிவிட முடியாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்திய நுகர்வோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018 தொடங்கியதிலிருந்தே பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.3 அதிகரித்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் மாறும் தன்மைக்கேற்ப அன்றாடம் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. பெட்ரோலியப் பண்டங்கள் மீது விதிக்கும் உற்பத்தி வரி உள்ளிட்டவற்றைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து பெட்ரோலியப் பண்டங்களின் விலை குறைவாக இருந்ததால் கிடைத்த பயனை அரசு முழுக்கப் பயன்படுத்தி தன்னுடைய வருவாயைப் பெருக்கிக்கொண்டது. இப்போது அரசின் நிதி நிலைமையைப் பராமரிப்பது சவால் மிகுந்ததாக ஆகியிருக்கிறது.
இதிலிருந்து விடுபட பெட்ரோலிய புதை படிமங்களைக் கண்டுபிடிப்பது, எண்ணெய் – நிலவாயு ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது தொடர்பான கொள்கையையும் உரிமம் வழங்கும் நடைமுறையையும் அரசு விரைவுபடுத்த வேண்டும். சீனாவைப் பின்பற்றி வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் வயல்களையும் ஏலம் எடுக்க இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். நமக்குத் தேவைப்படும் எண்ணெயைப் பெருமளவு இறக்குமதி செய்வதைவிட உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு வழிகளைக் காண வேண்டும். எண்ணெய் மட்டுமல்ல; எரிபொருள் தேவைக்கு மாற்று ஆற்றல்களையும் பயன்படுத்த வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT