Published : 30 Jan 2018 10:59 AM
Last Updated : 30 Jan 2018 10:59 AM

சிவசேனையின் முடிவு எதை உணர்த்துகிறது?

காராஷ்டிரத்தில் இனி எந்தத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவது என்ற முடிவை சிவசேனைக் கட்சி எடுத்திருக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது அக்கட்சியுடன் சிவசேனை முரண்படுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முடிவை எடுத்த நேரம்தான் வியப்பைத் தருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது எனும் நிலையில், முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்றே கருதப்படுகிறது.

2014-ல் நடந்த மகாராஷ்டிர சட்ட மன்றத் தேர்தலின்போதே இரு கட்சிகளும் தனித்தனியாகத்தான் போட்டியிட்டன. மாநிலத்தின் நீண்ட நாள் கூட்டாளி என்பதுடன் பெரிய கட்சி என்பதால், தான் ஒதுக்கும் தொகுதிகளைத்தான் பாஜக பெற வேண்டும் என்று கூறி, அதை அடக்கப் பார்த்தது சிவசேனை. பேரம் படியாததால் தனித்துப் போட்டியிட முடிவுசெய்தது பாஜக. இதை எதிர்பாராத சிவசேனையும் தனியாகப் போட்டியிட்டு, பாஜகவைவிடக் குறைவான தொகுதிகளில் வென்றது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே நிரந்தரப் பூசல் ஏற்பட்டுவிட்டது.

கருத்தியல்ரீதியாக இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. பால் தாக்கரே காலத்திலேயே சிவசேனை தனது மராட்டிய தேசியத்தைக் கைவிட்டு, இந்துத்துவாவை அரவணைத்து வளர முற்பட்டது. இனி, 2019 மக்களவைப் பொதுத் தேர்தல், அதன் பிறகு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுடன் கூட்டணி என்றால், பாஜக ஒதுக்கும் தொகுதி களைத்தான் பெற வேண்டும். இதைத் தவிர்க்கவும், அப்பாவைப் போல பிள்ளை உறுதியான தலைவர் அல்ல என்ற பேச்சைப் பொய்யாக்கவும் இந்த முடிவை உத்தவ் எடுத்திருக்கிறார்.

பாஜகவை இப்போது தோழமைக் கட்சியாகப் பார்க்காமல், போட்டியாளராகவே பார்க்கிறது சிவசேனை. மகாராஷ்டிரத்தில் இப்போது நிலவும் அரசியல் சூழலை ஏற்கவே உத்தவ் தாக்கரே மனம் மறுக்கிறது. பிற மாநிலங்களிலும் இந்துத்துவாவைத் தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறி சிவசேனை போட்டியிடுகிறது. மகாராஷ்டிரத்தில் தங்களுக்குச் செல்வாக்குள்ள இடங்களை பாஜக கைப்பற்றிவிட்டதால், பிற இடங்களில் அதற்கு சேதத்தை ஏற்படுத்துவது என்ற உறுதியான எண்ணத்தில் செயல் படுகிறது. சிவசேனை எவ்வளவு அலட்டிக்கொண்டாலும் பாஜக பதிலே பேசாமல் மெளனம் காக்கிறது. மத்தியில் ஆட்சியில் தொடர சிவசேனையின் ஆதரவு அதற்குத் தேவையில்லை. ஆனால், மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதால், கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு சிவசேனையைக் கேட்பதைத் தவிர்க்கிறது.

சிவசேனையிலேயே ஒரு பிரிவினர் பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்ளத் தயாராக இல்லை. கூட்டணியை விட்டு விலக முடிவுசெய்தால், கட்சியே உடையும் என்ற கவலையும் உத்தவ் தாக்கரேவுக்கு இருக்கிறது. எனவே, மகாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான கூட்டணி அரசைக் கவிழ்க்கும் செயலில் ஈடுபடாமல் இருக்கிறது. மத்தியிலும் ஆட்சியிலிருந்து விலகாமல் தொடர்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் கூட்டணி ஏற்படாவிட்டாலும் அரசில் ஒன்றாக இருக்கும் என்று இவற்றிலிருந்து உறுதியாகிறது. எனவே, தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் அரசில் சேர்ந்தே இருப்பார்கள் என்பது புரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x