Published : 22 Jan 2018 10:36 AM
Last Updated : 22 Jan 2018 10:36 AM

நீதித் துறை தன்னுடைய இடத்தை இழந்துவிடக் கூடாது!

ச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தொடர்பாகத் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது துரதிர்ஷ்டவசமான, அதேசமயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. நீதித் துறையின் உயர்நிலையில் இருக்கும் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடுகள் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கின்றன என்பதை இது கோடி காட்டியிருக்கிறது. இந்த சர்ச்சையில் யார் செய்வது அல்லது சொல்வது சரி என்பது ஒருபுறமிருக்க, நான்கு மூத்த நீதிபதிகள் திடீரென உயர்த்திய இந்தப் போர்க்கொடியால் ஏற்பட்ட அதிர்வுகள் அவ்வளவு எளிதில் அடங்கிவிடாது என்பதையே தொடர் நிகழ்வு கள் சொல்கின்றன.

மூத்த நீதிபதிகள் ஜெ.சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நிருபர்களைச் சந்தித்தாலும், கருத்து வேறுபாடுகளைத் தீவிரமாக்கிய பிரச்சினைகளை வெளிப்படையாகவும் விரிவாகவும் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கான வழக்குகளை ஒதுக்குவதில் தனது விருப்ப அதிகாரத்தின் பேரில், சில வகை வழக்குகளை சிலருக்கு மட்டுமே ஒதுக்குகிறார் தலைமை நீதிபதி என்றே அவர்கள் கருதுகின்றனர் என்பது புரிகிறது. கண்ணுக்குத் தெரியாத ‘வெளிக் கை’ ஒன்று இதில் இருப்பதாக அவர்கள் கருதுவது தெரிகிறது. எந்த வழக்கை, எந்தெந்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தலைமை நீதிபதியின் உரிமை என்று 1998-ல் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த நான்கு நீதிபதிகளும் அதை மறுக்கவில்லை. அந்தக் கருத்தை அப்படியே ஏற்கின்றனர். அதேசமயம், நீதித் துறை மீது சந்தேகம் எழும் வகையில், விரும்பத்தகாத முறையில் சில வழக்குகளைத் தலைமை நீதிபதி ஒதுக்குகிறார் என்று கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நான்கு நீதிபதிகளும் எழுதிய கடிதம், செய்தி ஊடகங்களுக்குத் தரப்பட்டது. அத்துடன் நீதிபதிகள் ஊடகங்களைச் சந்தித்துத் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே கடிதத்தில் எழுதப்பட்டதைவிட, நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்ததைவிட அவர்களுடைய குறைகள் தீவிரமானவை என்பது புலப்படுகிறது. ‘பிரசாத் கல்வி அறக்கட்டளை’ வழக்குதான் மூத்த நீதிபதிகள் தங்களுடைய அதிருப்தியை வெளிக்காட்டுவதற்கான தருணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த வழக்கில் சில மனுதாரர்களே, உச்ச நீதிமன்றத்தின் மீது செல்வாக்கு செலுத்த சிலர் முயல்வதாகக் குற்றம்சாட்டியிருந்தனர். அந்த வழக்கை விசாரிப்பதற்கான அமர்வை நீதிபதி சலமேஸ்வர் தெரிவித்திருந்தார். அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறவில்லை. ‘தலைமை நீதிபதி மீதும் குற்றச்சாட்டின் நிழல் படிவதால், அவரே விசாரிப்பது பொருத்தமாக இருக்காது’ என்ற அடிப்படையிலேயே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமர்வுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு என்பதில் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடே கிடையாது. ஆனால், அந்த அதிகாரம் எப்படிச் செலுத்தப்படுகிறது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, போலி என்கவுன்டரில் சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதாக நடைபெற்றுவரும் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி பி.எச்.லோயா, 2014-ல் மர்மமான முறையில் இறந்தார். சொராபுதீன் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறையின் அமைச்சராக இருந்தவர் இப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. எனவே, அவரை எதிரிகளில் ஒருவராக வழக்கில் சேர்த்திருந்தனர். பிறகு, அவருடைய பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு தொடர்பாகக் கவலை இருப்பதை நீதிபதிகள் வெளிப்படுத்தியிருப்பது, இந்த விவகாரத்தில் மிக கவனத்துக்குரிய ஒரு விஷயம்.

அடிப்படையில், இந்தப் பிரச்சினை நீதித் துறையின் உள் விவகாரம் என்றாலும், தேசத்தையே கவலை அடைய வைத்திருக்கும் விவகாரமும்கூட. நான்கு மூத்த நீதிபதிகள் இப்படித் தங்களுடைய அதிருப்தியைப் பகிரங்கப்படுத்த வேண்டிய அளவுக் குப் பூசல்கள் புரையோடிப் போயிருப்பதை இச்சம்ப வம் காட்டுகிறது. இனி, நீதித் துறைக்குள் பேசிப் பயனில்லை என்று சரியாகவோ - தவறாகவோ அவர்கள் முடிவுசெய்துவிட்டதைத்தான் அவர்களுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு காட்டுகிறது. உடனடியாக அனைத்து நீதிபதிகளும் பங்கேற்கும் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுடைய கருத்துகளைத் தலைமை நீதிபதி பொறுமையாகக் கேட்க வேண்டும். இனி, இப்படிப் பொதுவெளியில் நீதிபதிகள் தங்களுடைய அதிருப்திகளை வெளிப்படுத்தும் சூழல் உருவாகாத வகையிலான ஒரு முடிவை அவர் எடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம்போலச் செயல்பட்டுவரும் நீதித் துறையின் அடியில் பரவும் கரிய நிழல் துரதிர்ஷ்டவசமானது. இந்நாட்டின் சாமானியர்களின் கடைசி நம்பிக்கையாக இருந்துவரும் நீதித் துறை தன்னுடைய இடத்தை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x