Published : 17 Jan 2018 10:07 AM
Last Updated : 17 Jan 2018 10:07 AM

ஆணையிட்டால் வளர்ந்துவிடாது நாட்டுப்பற்று!

தி

ரையரங்குகளில் காட்சி தொடங்குவதற்கு முன்னால் தேசிய கீதத்தை இசைப்பது, இனி திரையரங்குகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்று கடந்த நவம்பர் மாதம் பிறப்பித்த ஆணையை இதன் மூலம் திரும்பப் பெற்றிருக்கிறது நீதிமன்றம். தேசிய கீதத்தை எங்கே, எப்படிப் பாட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் ஏதும் குறிப்பிடப்படாததால், குறிப்பிட்ட சில தருணங்களில், குறிப்பிட்ட இடங்களில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும், அதற்கு மக்கள் எழுந்து நின்று மரியாதை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்தது. இதையடுத்து, ‘உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறது என்றும், நிர்வாகத்தின் வேலையையும் தானே எடுத்துக்கொள்கிறது’ என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ‘இந்த வழிகாட்டு உத்தரவுகளை நீதிமன்றம் நிறுத்தி வைக்கலாம். தேசிய கீதம் தொடர்பாக மத்திய அமைச்சகங்களின் சில பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை நியமித்து உரிய வழிகாட்டு நெறிகளை அரசே உருவாக்கும்’ என்று மத்திய அரசு கூறியதை அடுத்து, தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். அரசு அமைக்கவுள்ள அந்தக் குழு, ‘தேசியச் சின்னங்கள் அவமதிக்கப்படுவதைத் தடுக்கும் தடைச் சட்டம் - 1971’ பற்றியும் பரிசீலனைசெய்து, அதில் சில மாறுதல்களை மேற்கொள்ளவும் பரிந்துரைசெய்யும் என்று தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த உத்தரவு தொடர்பாக அப்போதே கேள்வி எழுப்பினார். ‘‘திரையரங்குக்குள் தேசிய கீதம் பாடப்படும்போது, ரசிகர்கள் எழுந்து நின்று தங்களுடைய தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரிதானா?’’ என்று கேட்டார் சந்திரசூட். இந்த உத்தரவுக்குப் பிறகு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

தேச பக்தியையும் அரசியல் சட்டம் மூலமே வளர்க்க நினைக்கும் சிந்தனையாளர்கள், அதற்குத் திரையரங்குகளையும் கூட்டம் நடைபெறும் அரங்கங்களையும் ஏன் தேர்வுசெய்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது. தேசியக் கொடி, தேசப் படம், தேசிய கீதம் போன்றவற்றை அவமதித்தால்தான் என்ன என்று நாம் கேட்கவில்லை. தேசியக் கொடி காட்டப்படும்போதும் தேசிய கீதம் இசைக்கப்படும்போதும் உரிய மரியாதை தந்தாக வேண்டுமா என்றும் கேட்கவில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி போன்றவற்றை எப்படி மதிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அரசுதான். நாடாளுமன்ற ஜனநாயக நாட்டில் இவையெல்லாம் நீதித் துறையின் வேலையல்ல. ஜனநாயகத்தைப் பின்பற்றிவரும் பொதுமக்களிடம், தேசியச் சின்னங்கள் தொடர்பாக இயல்பாகவே மரியாதை இருக்கிறது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதைச் செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவது தேவையற்றது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x