Published : 18 Dec 2017 10:14 AM
Last Updated : 18 Dec 2017 10:14 AM

15-வது நிதிக் குழு: காத்திருக்கும் சவால்கள்!

மு

ன்னாள் வருவாய்த் துறைச் செயலர் என்.கே.சிங் தலைமையில் மத்திய அரசு அமைத்திருக்கும் 15-வது நிதிக் குழு தன் முன்னே உள்ள சவால்களை எப்படிச் சமாளிக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்று, வரி வருவாயில் 42%-த்தை மாநிலங்களோடு பகிர்ந்துகொள்வதாகப் பிரதமர் மோடி ஒப்புதல் தந்தார். ஆனால், தற்போது மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டங்களுக்குப் போதிய நிதியாதாரம் இல்லை என்றும் கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தச் சிக்கலுக்கு 15-வது நிதிக் குழு எப்படித் தீர்வு காணப்போகிறது என்பது அதன் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால்.

நிதிக் குழு, அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு. மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயை, மத்திய அரசும் மாநில அரசுகளும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கும் அதிகாரம் நிதிக் குழுவிடமே உள்ளது. அரசு நிர்வாகிகள், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் நிதிக் குழு முடிவெடுக்கும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள 15-வது நிதிக் குழு, 2019 அக்டோபருக்குள் தனது பணியைப் பூர்த்திசெய்து அறிக்கையை அளித்துவிட வேண்டும். 2020 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலத்துக்கு இக்குழுவின் பரிந்துரைகள்தான் அமலில் இருக்கும்.

‘புதிய இந்தியா-2022’ திட்டத்துக்கு ஏற்பவும், மத்திய அரசின் இப்போதைய வரவு-செலவு நிலவரத்துக்குப் பொருத்தமாகவும் வரி வருவாயைப் பிரித்துத் தருமாறு மத்திய அரசு நிதிக் குழுவிடம் கேட்டுக்கொள்ளவிருக்கிறது. மேலும் ராணுவம், நாட்டின் சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு, அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சி, பருவநிலை மாறுதலுக்கேற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காகவும் கூடுதலாக நிதி தேவை என்று வலியுறுத்தப்போகிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 42% நிதியைக் குறைத்தால், மாநிலங்களுக்கு நிச்சயமாக நிதி நெருக்கடி ஏற்படும். ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்று சொன்னதெல்லாம் வெறும் வாய்வார்த்தைகள் மட்டும்தானா என்ற கேள்வியும் எழும். ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதால் வருவாயை இழக்கும் மாநிலங்களுக்கு, 2022 ஜூன் வரையில் மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று உறுதியளித்துதான் ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

இவை போக, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொதுச் சரக்கு - சேவை வரி நிர்வாகத்தை விரிவுபடுத்துவது, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகிய அம்சங்களில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்குவதாகவும் மத்திய அரசு சொல்லியிருக்கிறது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு ஆகிய இலக்குகளும் இருக்கின்றன. எனவே, இவை அனைத்தையும் கணக்கில்கொண்டு, அவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டுக்கான சூத்திரத்தை நிதிக் குழு வகுக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. 15-வது நிதிக் குழுவுக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x