Published : 28 Dec 2017 09:51 AM
Last Updated : 28 Dec 2017 09:51 AM
இ
ந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் சீன அரசின் உயர் அதிகாரி யாங் ஜீச்சியும் டிசம்பர் 22-ல் சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இருவரும் தத்தமது நாடுகளின் ‘சிறப்புப் பிரதிநிதிகள்’ என்ற வகையில் 20-வது சுற்றுப் பேச்சில் கலந்துகொண்டனர். 19-வது சுற்றுப் பேச்சு நடந்து 20 மாதங்களுக்குப் பிறகு 20-வது சுற்று நடந்ததிலிருந்தே இடைப்பட்ட காலத்தில் உறவில் பிரச்சினைகள் இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். டோக்லாம் பகுதியில் சீனத் துருப்புகளும் இந்தியத் துருப்புகளும் எதிரெதிர் நிலையில் 70 நாட்களுக்கும் மேல் மல்லுக்கு நின்றது இந்தக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசிய பிறகு, இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எல்லைப் பிரச்சினைகள் குறித்துப் பேச மட்டும் இருதரப்புப் பிரதிநிதிகளும் நியமிக்கப்படவில்லை என்று புலனாகிறது. 2017-ல் மோடி - ஜீ ஜின்பிங் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் வழிகாட்டுதலில் இந்திய - சீனப் பிரதிநிதிகள் செயல்படுகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், பூசல்களாக வளர அனுமதித்துவிடக் கூடாது என்பதுதான் இரு தலைவர்களும் செய்துகொண்ட உடன்பாடு. உலக அளவில் நாடுகளுக்கு இடையிலான உறவில் நிலையில்லாத்தன்மை அதிகரித்துவரும் வேளையிலும் இந்தியாவும் சீனாவும் சுமுக உறவைப் பராமரிப்பதுதான் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் என்ற புரிதலில் இரு நாடுகளின் தலைவர்களும் உடன்பட்டுள்ளனர்.
அதேசமயம், இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசிவிட்டதால், இனி பிரச்சினைகளே இருக்காது என்றும் கருதிவிட முடியாது. 2013-ல் எல்லைப்புற தற்காப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவிழந்துகொண்டே இருக்கின்றன. இரு நாடுகளின் எல்லையில் அவ்வப் போது பதற்றம் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தன. பரஸ்பர சந்தேகம் காரணமாக இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பு பாதிக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளில் சீனா சில ஆதிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், தென் கிழக்கு ஆசிய கடல் எல்லைப் பகுதிகளில் இந்தியா சில இடங்களுக்குப் போய்வந்ததும் இரு நாடுகளுக்கும் இடையில் சில தேவையற்ற போட்டிகளுக்கு வழிவகுத்துவிட்டது.
பாகிஸ்தானுடன் பொருளாதார உடன்பாடு, மாலத்தீவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு, அணுப்பொருள் அளிப்பு நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்கத் தடை போன்ற நடவடிக்கைகள் மூலம் சீனா புவி - அரசியல்ரீதியாக நெருக்கடி தருகிறது என்றே இந்தியா கருத வேண்டிவந்தது. அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்கள், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் நான்காவது நட்பு நாடாக ஒப்பந்தம், சீனத்தின் பட்டுப்பாதை திட்டத்துக்கு இந்திய எதிர்ப்பு ஆகியவற்றை சீனா அப்படியே எதிர்மறையாக நினைக்கிறது. இந்தக் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் டோக்லாம் போன்ற மோதல் சம்பவங்கள் இனியும் நிகழாமல் தவிர்க்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT